‘டிவிஎஸ் வேணு’ குழுமத்தின் ஒரு அங்கமும், இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனமுமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஓசூர் உற்பத்தி ஆலையிலிருந்து 10 லட்சமாவது ‘டிவிஎஸ் ஐக்யூப்’ மின்சார ஸ்கூட்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்த மைல்கல் இந்தியாவின் மின்வாகனப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், நிலையான, அதிநவீன மற்றும் தன்னிறைவு பெற்ற போக்குவரத்தின் எதிர்காலத்தை நோக்கி இந்தியா அடைந்து வரும் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. 'வளர்ந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா மிக வேகமாக முன்னேறி வரும் இத்தருணத்தில், நிலையான வளர்ச்சி, ஆற்றல் மாற்றம் மற்றும் தொழில்நுட்பத் தலைமைத்துவத்திற்கு மின்வாகனப் போக்குவரத்து ஒரு முக்கிய உந்துசக்தியாக உருவெடுத்து வருகிறது.
இந்தியாவின் மின்வாகனப் பயணத்தின் முன்னோடிகளில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார், தனது நிறுவனத்தின் சொந்தப் பொறியியல் கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு புதிய தயாரிப்புகள் மற்றும் தயாரிப்புகளைக் கடைசி எல்லை வரை கொண்டு சேர்க்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் மின்வாகனப் போக்குவரத்துத் துறையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. உலக நாடுகளுக்காக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் 'டிவிஎஸ் ஐக்யூப்', உலகளாவிய தரம், அபாரமான செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றுடன் இந்தியத் திறமையையும் ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மின்வாகனப் போக்குவரத்தில் தன்னிறைவு பெறுவதோடு, நவீன தொழில்நுட்பத் திறனில் டிவிஎஸ் மோட்டார் கொண்டுள்ள அக்கறையையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் சுதர்ஷன் வேணு கூறுகையில், "10 லட்சம் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகிருயிப்பது, இந்தியாவில் மின்வாகனப் போக்குவரத்து எந்த அளவிற்கு மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவருகிறது என்பதைக் காட்டுகிறது. உலகத்தரம் வாய்ந்த மின்வாகனத் தீர்வுகளை உருவாக்குவதற்காகப் பொறியியல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உற்பத்தித் திறன்களில் நாங்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட முதலீடுகளின் பலனே இந்த மைல்கல் ஆகும். இந்த முதலீடுகள், உலகிற்காக இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த மின்வாகனப் போக்குவரத்துத் தீர்வுகளை உருவாக்க எங்களுக்குப் பெரிதும் உதவியுள்ளன.
