உலகின் ஐந்தாவது மிகப்பெரிய ஜுவல்லரி ரீடெய்ல் குழுமமும், வாடிக்கையாளரின் நம்பிக்கைக்குரிய நகை நிறுவனமுமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஆனது 2026-27 நிதியாண்டிற்காக 200 கோடி ரூபாய் மதிப்பிலான தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) சார்ந்த நலத் திட்டங்களை இன்று அறிவித்துள்ளது. புது டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த CSR தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் உள்ள 33,000 மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மலபார் குழுமத்தின் தலைவர் திரு. எம்.பி. அகமது, இந்திய செயல்பாடுகளின் மேலாண் இயக்குனர் திரு. ஓ. ஆஷர், செயல் இயக்குனர்கள் திரு. நிஷாத் ஏ.கே. மற்றும் திரு. அப்துல்லா இப்ராகிம், கேரளா ஹவுஸ் ரெசிடென்ட் கமிஷனர் திரு. புனீத் குமார் ஐ.ஏ.எஸ்., பிரதாம் (Pratham) அமைப்பின் சி.இ.ஓ. செல்வி. ருக்மணி பானர்ஜி மற்றும் தனல் (Thanal) அமைப்பின் தலைவர் டாக்டர் இத்ரிஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், மலபார் அறக்கட்டளையின் இந்த சீரிய முன்னெடுப்புகளும், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ (Beti Bachao, Beti Padhao) போன்ற திட்டங்களும் இந்தியாவின் மகள்களுக்கு அதிகாரமளிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் இலட்சிய சிந்தனையுடன் ஒத்துப் போகிறது” என்றார்.
மேலும் குறிப்பிடுகையில், “சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்காக (CSR) 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் எடுத்துள்ள முடிவு, நாட்டின் முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும். இந்தியாவின் வளர்ச்சி என்பது அதன் மக்களின்-குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் வேரூன்றி உள்ளது என்பதை வலியுறுத்திய அவர், கல்வி மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளையும் பாராட்டினார்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரிய பெரிய கனவுகளைக் காணவும், எல்லைகளைக் கடந்து முன்னேறவும், இந்தியா வழங்கும் மகத்தான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஊக்குவித்ததோடு, தேசத்தின் வளர்ச்சிக் கதையில் தீவிரமாகப் பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மலபார் குழுமத்தின் தலைவர் திரு. எம்.பி. அகமது குறிப்பிடுகையில், "மனித வள மேம்பாடு என்பது தேச வளர்ச்சியின் முதுகெலும்பாகும். தரமான கல்வியின் மூலம் திறமைகளை வளர்ப்பது அவசியமானது. இந்த கல்வி உதவித்தொகை திட்டம் மாணவர்கள் கல்வி ரீதியாக வெற்றி பெறவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவும். குறிப்பிடத்தக்க CSR முதலீடுகள் மூலம் நிலையான மற்றும் நீண்டகால சமூக மாற்றத்தை உருவாக்க எங்கள் குழுமம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும்" என்று தெரிவித்தார்.
2026-27 நிதியாண்டில், 19 மாநிலங்களில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் 15 முக்கிய திட்டங்களின் கீழ் 200 கோடி ரூபாய் மதிப்பிலான CSR திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டங்களின் மூலம் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, வீதியோரக் குழந்தைகளுக்கான நுண்-கற்றல் மையங்கள் மற்றும் மாணவிகளுக்கான தேசிய அளவிலான கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்களுக்காக 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 'பசியில்லா உலகம்' (Hunger Free World) திட்டத்தின் கீழ் உணவு விநியோகத்திற்காக 30 கோடி ரூபாயும், சுகாதாரத் திட்டங்களுக்காக 14.2 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதரவற்ற தாய்மார்களுக்கான ‘பாட்டி வீடு’ (Grandma Home) உள்ளிட்ட வீட்டுவசதித் திட்டங்களுக்கு 25 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும், பிற மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு 6.8 கோடி ரூபாயும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு 10 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.
மலபார் குழுமத்தின் 33-வது ஆண்டு விழாவையொட்டி, இந்த ஆண்டு 18 மாநிலங்களில் உள்ள 284 மாவட்டங்களைச் சேர்ந்த 33,000 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 1,15,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைந்துள்ளனர். அனைத்து CSR திட்டங்களும் மலபார் அறக்கட்டளை (Malabar Charitable Trust) மூலம் செயல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வீதியோரக் குழந்தைகளின் மறுவாழ்விற்காக, இந்தியாவின் மிகப்பெரிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான 'பிரதம் எஜுகேஷன் ஃபவுண்டேஷன்' உடன் இணைந்து 17 மாநிலங்களில் 1,543 நுண்-கற்றல் மையங்களை மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவியுள்ளது. இந்த மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2,500 ஆக உயர்த்தப்படும், இதன் மூலம் மாணவர் சேர்க்கை 64,000-லிருந்து 1 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'பசியில்லா உலகம்' திட்டத்தின் கீழ், இந்தியா, சாம்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் தினசரி 1,15,000 பேருக்குச் சத்தான உணவு வழங்கப்படுகிறது. ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் பராமரிப்பு வழங்கும் ‘பாட்டி வீடு’ திட்டம் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு மானிய விலையில் மருந்துகளை வழங்கும் மலபார்-தனல் (Malabar-Thanal) மருந்தகங்கள் ஆகியவை பிற முக்கிய CSR திட்டங்களாகும்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம்) கொள்கைகளின் அடிப்படையில் அமைகின்றன. நிறுவனம் தொடங்கப்பட்டது முதல், அதன் நிகர வர்த்தக லாபத்தில் 5 சதவீதத்தை CSR நடவடிக்கைகளுக்காக ஒதுக்கி வருகிறது. இந்தத் திட்டங்கள் பிரதம் மற்றும் தனல் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பெண்கள் மேம்பாடு, சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
இந்த முயற்சிகள் ஏற்கனவே இந்தியா முழுவதும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.
