அமைச்சர்கள், திரைத்துறையினருக்கு சாதனையாளர் விருது: தி ரைஸ் மாநாட்டில் வழங்கப்பட்டது



மதுரையில் தி ரைஸ் - சங்கம் 5 தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு நடந்து வருகிறது. முதல் நாளான ஜனவரி 8 அன்று அலங்காநல்லூரில் உலக்த் தமிழர் ஜல்லிக்கட்டு போட்டியுடன் கோலாகலமாக தொடங்கிய மாநாட்டில் தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி,  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உலகத் தமிழர்களை இணைக்கும் பெருவிழாவாக நடந்து வரும் மாநாட்டின் இரண்டாம் நாளில் நிகழ்வு தமிழ்த் தொழில் முனைவோர், ஐடி நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றன. சர்வதேச தமிழ் பொறியாளர்கள் அமைப்பு தலைமையில் நடைபெற்ற ஸ்ட்ராடஜி அமர்வுகள், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் இந்திய நகரங்களை இணைக்கும் பவர் நெட்வொர்க்கிங் சந்திப்புகள் முக்கிய கவனத்தை பெற்றன.

இதனைத் தொடர்ந்து பி2பி ஏற்றுமதி - இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு, ஐடி மற்றும் ஸ்டார்ட்-அப் சூழல் குறித்த கருத்தரங்குகளும் நடைபெற்றன. பிட்ச் டெக் மூலம் புதிய தொழில் முயற்சிகளுக்கு முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

மாலையில் நடைபெற்ற நிகழ்வில் குளோபல் தமிழ் மீடியா மற்றும் தமிழ் இம்பாக்ட் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சமூக மற்றும் தொழில்துறை பங்களிப்புகளுக்காக பல்வேறு ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர், நடிகர் கே.பாக்கியராஜ், வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் பொன்வண்ணன், வேலா ராமமூர்த்தி, கணேஷ் வெங்கட்ராமன், தொகுப்பாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின்போது, வாழ்நாள் இசைத் தவம் விருது இசைக்குயில் பி.சுசீலா, வாழ்நாள் தமிழ்த் தவம் விருது பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, தமிழ் அறிஞர் டாக்டர் மா. ராஜேந்திரன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகர் விருது அருண் விஜய் (வனமகன்), சிறந்த நடிகை விருது ஷீலா ராஜ்குமார் (கெவி), சிறந்த இயக்குனர் மகிழ் திருமேனி (விடாமுயற்சி), சிறந்த திரைப்படம் தலைவன் தலைவி (தயாரிப்பாளர் வி.தியாகராஜன்),  சிறந்த குணசித்திர நடிகர் மூணார் ரமேஷ் (சிறை), சிறந்த குணச்சித்திர நடிகை விஜி சந்திரசேகர் (விடாமுயற்சி), சிறந்த வில்லன் மைம் கோபி (கேங்கர்ஸ்), சிறந்த இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா (பைசன்), சிறந்த அறிமுக நடிகர் அக்‌ஷய் குமார் (சிறை), சிறந்த வளர்ந்து வரும் நடிகை லவ்லின் சந்திரசேகர் (நிறம் மாறும் உலகில்), சிறந்த படப்பிடிப்பாளர் சுகுமார் (தலைவன் தலைவி), வாழ்நாள் சாதனையாளர் விருது (டைமண்ட் பாபு) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த தமிழ் இன்ஸ்பிரேஷன் விருது சாகுல் ஹமீது (தி ரைஸ் யுஏஇ தலைவர்), சிசில் சுந்தர் (மைக்ரோசாஃப் இயக்குனர்),  சுபா உமாதேவன் (சுவிட்சர்லாந்து), ஹரி கோபாலன் (சன்பீம் பள்ளிகள் நிறுவனர், சித்ரா கணபதி (துணை நிறுவனர், கடம்பபவனம், மதுரை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இரண்டாம் நாள் மாநாட்டின் முத்தாய்ப்பாக பசுமை அரசியல் ஆளுமை விருது தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களுக்கும், தன் நகர் வளர்த்த தன்னிகரில்லாதவர் விருது நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும்,  ஜல்லிக்கட்டு காவலர் விருது பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் நிபந்தனையின்றி கீழடி அகழ்வாய்வுக்கு நிலம் தந்த கீழடி மேன்மக்களும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

தி ரைஸ் - சங்கம் 5 மாநாடு நாளை (ஜனவரி 10) மற்றும் நாளை மறுதினம் (ஜனவரி 11) ஆகிய நாட்களும் நடைபெறுகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form