மதுரையில் தி ரைஸ் அமைப்பு நடத்தும் சங்கம் 5 உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு, அலங்காநல்லூரில் உலகத் தமிழர் ஜல்லிக்கட்டுடன் தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் பி.மூர்த்தி பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 750 காளைகள் மற்றும் 250 வீரர்களும் உற்சாகமாக கலந்து கொண்டு காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர்.
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் 2016ம் ஆண்டு 'தி ரைஸ்' துவங்கப்பட்டது. மதுரையில் முதல் மாநாடு நடந்தது. அதன் பிறகு பல்வேறு நாடுகளில் தி ரைஸ் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, தற்போது 16வது மாநாடாக மீண்டும் மதுரையில் தி ரைஸ் சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது.
‘தி ரைஸ் - சங்கம் 5 : மா மதுரை 2026’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியுடன் கோலாகலமாகத் தொடங்கியது. அலங்காநல்லூர், டாக்டர் கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கில் நடைபெற்ற உலகத் தமிழர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.
சங்கம் 5 மாநாட்டுக் குழு சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி ரைஸ் குளோபல் அமைப்பின் நிறுவனர் ஃபாதர் ஜெகத் கஸ்பர் ராஜ், தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் பி.ராஜ சேகரன், தி ரைஸ் ஜல்லிக்கட்டு பிரிவு பொதுச் செயலாளர் பாலகுரு, தி ரைஸ் அமைப்பின் தென்மண்டல இயக்குனர் பெரிஸ் மகேந்திரவேல், தி ரைஸ், மதுரை தலைவர் பதஞ்சலி சரவணன் மற்றும் உலகம் முழுவதிலும் 55 நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
தி ரைஸ் - சங்கம் 5 உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு ஜனவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 2000க்கும் மேற்பட்ட தமிழ் தொழிலதிபர்கள் மதுரை வந்துள்ளனர்.