வலிப்பு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் கே.அசோகன்



வலிப்பு நோய் வராமல் தடுக்கவும் மற்றும் வலிப்பு நோய் வந்தவர்களும் அதனால் மேலும் அதிக பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது மிகவும் முக்கியம் என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மூத்த ஆலோசகரும், நரம்பியல் நிபுணரும் மற்றும் துறைத் தலைவரும் டாக்டர் கே. அசோகன் கூறியுள்ளார்.

இயல்பான நிலையில் இருக்கும் ஒருவருக்கு திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் வலிப்பு வரத் தொடங்கினால், அது வலிப்பு நோய்க்கான அறிகுறியாகும். கை கால்கள் இழுத்துக் கொண்டு ஏற்படும் வலிப்பு என்பது விவரிக்க முடியாத வகையில் உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலையாகும். இதனால் உலகம் முழுவதும் 6 கோடியே 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வலிப்பு என்பது பொதுவாக நரம்பியல் சம்பந்தமான நோயாகும், இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயது வித்தியாசம் இன்றி பாதிப்பை ஏற்படுத்தும் ஒருவித நோயாகும். வலிப்பு ஏற்படும் ஒருவர் திடீரென்று சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் ஆற்றலை இழக்கிறார், மேலும் அவரது தசைகளில் பிடிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

அவ்வாறு வலிப்பு ஏற்படும்போது அவர் கீழே விழுந்து அவரது கை மற்றும் கால்கள் இழுத்துக் கொள்வதோடு அவரது வாயில் இருந்து நுரை வெளியேறும். இவ்வாறு பாதிக்கப்படும் ஒருவருக்கு அது அவரது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் சமூகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். வலிப்பு நோய் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17-ந்தேதி தேசிய வலிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வலிப்பு நோய் குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மூத்த ஆலோசகரும், நரம்பியல் நிபுணரும் மற்றும் துறைத் தலைவரும் டாக்டர் கே. அசோகன் கூறுகையில், ஒரு நபரின் மூளை முழு உடலையும் கட்டுப்படுத்துகிறது, எனவே இந்த மூளை தொடர்பான பிரச்சினைக்கு சரியான சிகிச்சை அவசியம். நோய் அறிதலுக்கு, முதலில் கை கால் வலிப்பு வகையைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இதுபோன்ற வலிப்பு நோய் உள்ள நோயாளிகளில் பெரும்பாலானோரை மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும். அது பயன் அளிக்காத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்" என்றார் 

மேலும் பேசுகையில் , "இதேபோல் வாழ்க்கை முறை மாற்றங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நல்ல தூக்கம், தினந்தோறும் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதன் மூலம் வலிப்பு நோய் வராமல் தடுக்கலாம். அதேபோல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம் ஆகும். மேலும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிப்பதன் மூலம் உடல் சீரான நிலையில் இருக்கும். இது தவிர, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதுடன், மருத்துவரின் வழிகாட்டுதலின்படி சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வதும் வலிப்பு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். வலிப்பு ஏற்படும் ஒருவர் தாங்களாகவே கை வைத்தியம் செய்யாமல் அனுபவமிக்க மருத்துவரை அணுகி அவர் தரும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்" என டாக்டர் கே. அசோகன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form