எஸ்ஏபி எஸ்இ 2030-க்குள் இந்தியாவில் 2 மில்லியன் பேருக்கு ஏஐ-க்கு ஏற்ற திறன்களை வழங்கும் தனது இலக்கை எட்ட மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்தது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள விரிவான கற்றல், சான்றிதழ் மற்றும் பணியாளர் மேம்பாட்டுத் திட்டங்களின் அடிப்படையில், எஸ்ஏபி நிறுவனம் கல்வி நிறுவனங்கள், தொழில்துறை கூட்டாளர்கள், அரசு அமைப்புகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும். இதன் மூலம் ஏஐ, கிளவுட், தரவு மற்றும் நிறுவனத் தொழில்நுட்பங்களில் நடைமுறைத் திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெரிய அளவில் விரிவுபடுத்தும்.
உலகளாவிய எஸ்டிஇஎம் பணியாளர்களில் 28 சதவிதம் மற்றும் சர்வதேச சாஃப்ட்வேர் என்ஜினியரிங் திறனாளர்களில் 23 சதவிதம் இந்தியாவிலேயே உள்ளதால், ஏஐ பொருளாதாரத்தில் ஒரு முன்னணி நாடாக இந்தியா வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. எஸ்ஏபி-இன் கற்றல் சூழலிலும் இந்தத் தேவை ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது. உலகளவில் எஸ்ஏபி-இன் சான்றிதழ் பெற்ற கற்பவர்களில் சுமார் 48 சதவிதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது எஸ்ஏபி-இன் உலகளாவிய திறனாளர் சூழலில் இந்தியாவின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எஸ்ஏபி-இன் சர்வதேச உறுதிமொழிக்கு இந்தியாவின் இந்த அர்ப்பணிப்பு வலுசேர்ப்பதுடன், வணிகம் மற்றும் தொழில்துறைகளில் ஏஐ-யைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நடைமுறை நிபுணத்துவத்துடன் தொழில்நுட்பக் கல்வியை இணைக்கிறது.
தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டை அந்தந்தப் பிராந்தியப் பணியாளர் தேவைகளுக்கு ஏற்ப இணைப்பதற்காக, இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களுடன் எஸ்ஏபி இணைந்து செயல்படுகிறது. இந்த முன்முயற்சியானது தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு அடிப்படை ஏஐ கற்றல், தகவல்தொடர்புத் திறன், தொழில்துறை நேரடி அனுபவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்கி, பணியிடச் சூழல்களில் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த உதவுகிறது.எஸ்ஏபி யுனிவர்சிட்டி அலையன்சஸ் எஸ்ஏபி லேர்னிங் ஹப் மாணவர் பதிப்பு மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் உடனான கூட்டாண்மைகள் மூலமாக, மாணவர்கள் தொழில்துறைக்கு ஏற்ற திறன்களையும் நேரடி செயல்முறை அனுபவத்தையும் பெற எஸ்ஏபி உதவுகிறது. பணிப் பொறுப்பு சார்ந்த கற்றல், நேரடிப் பயிற்சி மற்றும் தொழில்துறையால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் மூலம் மாணவர்கள், ஆரம்பக்கட்டப் பணியாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் என அனைவரும் ஏஐ-சார்ந்த வணிகச் செயலிகள் என வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நடைமுறை நிபுணத்துவத்தைப் பெற எஸ்ஏபி-இன் கற்றல் மற்றும் சான்றிதழ் தொகுப்பு வழிவகுக்கிறது.
எஸ்ஏபி-இன் உள்ளடக்கிய திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், முன்னணித் தொழில்நுட்ப மையங்களுக்கு அப்பால், பெண்கள், வேலையற்ற பட்டதாரிகள், கிராமப்புற/சிறுநகர இளைஞர்கள் ஆகியோருக்கு நடைமுறைத் தொழில்நுட்பக் கல்வியைக் கொண்டு சேர்க்கின்றன. எஸ்ஏபி-இன் எஸ்டிஇஎம் மற்றும் சமூகத் திட்டங்கள், வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவுடன் சேர்த்து, ஏஐ, டிஜிட்டல் மற்றும் பணியிடத் திறன்களில் 1,100-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்ட நேரங்களை வழங்குகின்றன. மேலும், கோட் உன்னதி, டிஜிட்டல் அகாடமி, பெண்களுக்கான ஏஐ வேலைவாய்ப்புகள் போன்ற திட்டங்களின் மூலம், எஸ்ஏபி நிறுவனம் தொழில்நுட்பப் பயிற்சியை நேரடி செயல்திட்டங்கள் மற்றும் தொழில் வழிகாட்டுதலுடன் இணைக்கிறது. இது 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட பரந்த அளவிலான கற்பவர்கள் தொழில்நுட்பத் துறையில் தங்களது பணிகளைத் தொடங்கத் தயாராக உதவுகிறது.
எஸ்ஏபி இந்தியத் துணைக்கண்டத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மனிஷ் பிரசாத் கூறுகையில், "தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வலிமைக்கு எப்போதுமே அதன் மக்கள்தான் அடிப்படை அடித்தளமாக இருந்து வந்துள்ளனர். அடுத்தகட்ட புதுமை அலைக்கு இந்திய திறனாளர்களைத் தயார்படுத்துவதற்கு, மக்கள் எப்படிக் கற்கிறார்கள், தங்களது திறன்களை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள், அவற்றை எவ்வாறு தங்கள் பணிகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதில் தொடர்ச்சியான முதலீடு தேவைப்படுகிறது. 2030-க்குள் நாங்கள் ஏஐ திறன்களில் பயிற்சியளிக்க எதிர்பார்க்கும் 2 மில்லியன் பேரில், கிட்டத்தட்ட 13% பேர் ஏற்கனவே சான்றிதழ், மாணவர் கல்வி, சமூகத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் எஸ்ஏபி வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள், மாணவர்கள், கற்றல் வாய்ப்புகளைப் பெறும் விளிம்புநிலைச் சமூகத்தினர் ஆகியோர் அடங்குவர்” என்றார்.
