டைட்டன் கம்பெனி லிமிடெட் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில் உள்ள அஞ்செட்டி கிராம பாசனக் குளமான 'அக்கா தங்கை ஏரியை' வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. இந்த மறுசீரமைப்புத் பணியின் மூலம் சுமார் 500 விவசாயிகளுக்கான நீர் வசதி பலப்படுத்தப்படும் என்றும், 511 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏறத்தாழ 85 ஆழ்துளை கிணறுகள் மறுஊட்டம் பெறும். சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் சாகுபடி செய்யும் சாத்தியக்கூறுகள் உருவாக்கப்படும். தேசிய வேளாண்மை அறக்கட்டளையுடன் இணைந்து, டைட்டன் நிறுவனத்தின் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை பாதுகாக்கும் முன்முயற்சியான 'பிரகதி' திட்டத்தின் கீழ் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனம், 2024ஆம் ஆண்டு முதல், பெண் குழந்தைகளின் கல்வி, திறன் மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி, கண் மருத்துவ சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்காக (CSR) சுமார் ரூ.100 கோடி செலவிட்டது. இதில், மரம் வளர்ப்பு மற்றும் நீர்நிலைகளைப் புனரமைத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக மட்டும் சுமார் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்கா தங்கை ஏரியானது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஓசூரிலிருந்து ஒகேனக்கல் செல்லும் பாதையில் சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அக்கா தங்கை ஏரி, அஞ்செட்டியைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு நீண்ட காலமாகப் பயன்பட்டு வருகிறது. அக்கா தங்கை ஏரி புத்துயிர் பெறுவதற்கு முன்பு, நிலத்தடி நீர்மட்டம் சுமார் 120 முதல் 250 அடி ஆழமாகக் குறைந்ததாகவும், மழைப்பொழிவை நம்பிய விவசாயம் சுமார் 40% ஆகக் குறைந்துவிட்டதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
இந்த மறுசீரமைப்புப் பணியில் தூர்வாருதல் மற்றும் சுமார் 2.36 லட்சம் கன மீட்டர் மண் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மண் முழுவதும் ஏரிக்கரையைப் பலப்படுத்த உபயோகிக்கப்பட்டது. மதகு அமைப்புகள் மற்றும் உபரிநீர் செல்லும் தடுப்பணை புதுப்பிக்கப்பட்டன. கற்களை அடுக்கி அணைக்கட்டை பலப்படுத்துதல் மற்றும் அதன் அடிப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைத்தல், நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்தல் மற்றும் புதிய கால்வாய்களை உருவாக்குதல், 'கேபியன்' (gabion) வகை தடுப்பணைகளை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒட்டுமொத்தமாக, இந்த முன்முயற்சியானது தோராயமாக 4.10 லட்சம் கிலோலிட்டர் நீர் சேமிப்புத்திறனை உருவாக்கும். ஏரியின் கொள்ளவு திறனான 14.40 லட்சம் கிலோலிட்டருக்கு எதிராக, தற்போது ஏரியின் இருக்கும் நீரின் அளவு தோராயமாக 10.36 லட்சம் கிலோலிட்டராக உள்ளது.
அக்கா தங்கை ஏரி மறுசீரமைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜாய் சாவ்லா கூறுகையில், "டைட்டன் நிறுவனத்தைப் பொறுத்தவரை, நிலைத்தன்மை என்பது நீண்ட காலத்திற்கு மதிப்பு சேர்ப்பதற்கும், அடிமட்டத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை உருவாக்குவதற்கும் ஒரு இன்றியமையாத பகுதியாகும். அரசு அதிகாரிகளுடன் இணைந்து உள்ளூர் மக்களின் ஒத்துதுழைப்போடு இந்த அக்கா தங்கை ஏரி மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பருவமழையையும் நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் இத்தகைய பாரம்பரிய நீர்நிலைகளின் மறுசீரமைப்பு ஒரு மிக முக்கியமான முதலீடாகும். ஏரியின் பலன்கள் தொடர்ந்து அப்பகுதி மக்களைச் சென்றடைய, முறையான பராமரிப்புப் பணிகளையும் உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் தொடர்ந்து உறுதி செய்வதே எங்களது தற்போதைய முக்கிய முன்னுரிமையாகும்!" என்றார்.
ஏரியின் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் நிலைத்தன்மை பிரிவின் தலைமை அதிகாரி என்.இ. ஸ்ரீதர் கூறுகையில், "அக்கா தங்கை ஏரிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளானது, அதன் வரத்துக் கால்வாய்கள், மதகுகள், உபரிநீர் வழி மற்றும் கரைகள் போன்ற அனைத்து அடிப்படை உள்கட்டமைப்புகளையும் பலப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த ஏரி ஒரு சிறந்த பாசன ஆதாரமாக இனி சிறப்பாகச் செயல்படும்.
மேம்பட்ட நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் மறுஊட்டம் ஆகியவை இப்பகுதி விவசாயிகள் எதிர்கொள்ளும் நீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பெரிதும் உதவும். இது விவசாய உற்பத்தியை உயர்த்துவதுடன், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் பலப்படுத்தும். மேலும், ஏரியைச்சுற்றி மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதியின் சூற்றுச்சூழல் மறுசீரமைப்பும் மிகச் சிறப்பாக மேம்படும். யானைகளுக்கும், இதர வனவிலங்களுக்கும் இந்த ஏரி ஒரு புதுப்பிக்கப்பட்ட சரணாலயம் போல் இருக்கும்" என்றார்.
டைட்டன் மற்றும் தேசிய வேளாண்மை அறக்கட்டளையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த அக்கா தங்கை ஏரி மறுசீரமைப்புப் பணியில் பல அரசுத் துறைகளும் அமைப்புகளும் கைகோர்த்துள்ளன. இத்திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை , பொதுப்பணித்துறை, தூய நீருக்கான சர்வதேச மையம் மற்றும் வனத்துறை ஆகியவை இணைந்து தங்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. ஏரியின் பராமரிப்பு, நீர் மேலாண்மை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் முடிவெடுக்கவும் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கொண்டு பிரத்தியேகமான 'விவசாயிகள் சங்கம்' உருவாக்கப்பட்டுள்ளது. ஏரியைத் தொடர்ந்து சுத்தமாகப் பராமரித்தல், தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல் மற்றும் நடப்பட்ட மரக்கன்றுகளைப் பாதுகாத்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் 'கிராம நீர் பயன்படுத்துவோர் குழு' இனி தீவிரமாக மேற்பார்வையிடும்.
அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கா தங்கை ஏரியை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜாய் சாவ்லா டைட்டன் நிறுவனத்தின் நிலைத்தன்மைப் பிரிவின் தலைமை அதிகாரி என்.இ. ஸ்ரீதர் மற்றும் தேசிய வேளாண்மை அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரியும் செயலாக்கப் பங்காளருமான டாக்டர் எஸ்.வி. முருகன் ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களிடம் அக்கா தங்கை ஏரியை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தனர். இந்நிகழ்வு தர்மபுரி நீர்வளத்துறையின் செயற்பொறியாளர் பொறியாளர் செந்தில்குமார்மற்றும் ஓசூர் பிரிவு வனத்துறை அலுவலர் என். ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அக்கா தங்கை ஏரியைப் புனரமைக்கும் பணி, டைட்டன் நிறுவனத்தின் ‘பிரகதி’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர் வளப் பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் மூலம், இதுவரை 12-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டு, 120 கோடி லிட்டருக்கும் அதிகமான நீரைச் சேமிக்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 157 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட குண்டுப்பெரும்பேடு ஏரி, தேசிய வேளாண் அறக்கட்டளையுடன் இணைந்து புனரமைக்கப்பட்டது. இதன் மூலம், 26 கோடி லிட்டர் நீரைச் சேமிக்கும் திறன் கூடுதலாக உருவாக்கப்பட்டது. ஓசூரில் உள்ள சிப்காட் ஏரியின் நீர் சேமிப்புத் திறன் 5.6 கோடி லிட்டரில் இருந்து 17.1 கோடி லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டத்தில் உள்ள மசஒரம்பு ஓடையில் அமைக்கப்பட்டுள்ள 9 தடுப்பணைகள் மூலம், 15 கோடி லிட்டர் நீரை கூடுதலாகச் சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அக்கா தங்கை ஏரியைப் புனரமைக்கும் திட்டம், டைட்டன் நிறுவனத்தின் மூன்றாவது முக்கிய நீர்நிலை புனரமைப்புத் திட்டமாகும். இதன் மூலம், 40 கோடி லிட்டர் நீரைச் சேமிக்கும் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் நீர் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், பாசன வசதிகளை மேம்படுத்தவும், உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும் உதவும். மேலும், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்களைக் குறைப்பதுடன், கூடுதல் பயிர் சாகுபடி மேற்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இத்தகைய திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் பயனளிப்பதை உறுதி செய்ய, உள்ளூர் மக்களின் பங்கேற்புடன் ஏரி மேலாண்மைக் குழுக்கள் அமைத்துச் செயல்படுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
#titan #akkathangai lake #hosur #krishnagiri #rejuvenation #50years
