தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஆலோசனை மற்றும் வணிகத் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்மற்றும் கர்நாடக அரசு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து நடத்தும் டிசிஎஸ் கிராமப்புற ஐடி வினாடி வினாவின் 27-வது பதிப்பிற்கான பதிவுகளை அறிவித்துள்ளன.
பெங்களூரு டெக் மாநாடு 2026-ன் ஒருங்கிணைந்த பகுதியாக நடைபெறும் டிசிஎஸ் கிராமப்புற ஐடி வினாடி வினாவில், ஆன்லைன் தேர்வுகள், மெய்நிகர் வினாடி வினா சுற்றுகள் மற்றும் நேரடிப் போட்டிகள் இடம்பெறும். இந்தியா முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்த வினாடி வினாவில் பங்கேற்கலாம். இருப்பினும், மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்க முடியாது.
லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் கிராமப்புற மாணவர்களுக்கான இந்தியாவின் முதல் ஐடி வினாடி வினா என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ள டிசிஎஸ் கிராமப்புற ஐடி வினாடி வினா, இளம் மாணவர்களிடையே தொழில்நுட்பம் மற்றும் புதுமை குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், வணிகம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பப் போக்குகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை இந்த வினாடி வினா உள்ளடக்கியுள்ளது. மேலும், வங்கி, கல்வி, பொழுதுபோக்கு, ரோபோட்டிக்ஸ், ஊடகம், விளையாட்டு, கேமிங் மற்றும் சமூக வலைதளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தையும் எடுத்துரைக்கிறது.
இந்தப் போட்டியின் ஒரு பகுதியாக, 8 மண்டல அளவிலான இறுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் வெற்றி பெறுபவர்கள், நவம்பர் 2026-ல் பெங்களூருவில் நடைபெறும் தேசிய இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். அனைத்து மண்டல அளவிலான வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.10,000 மற்றும் ரூ.7,000 மதிப்பிலான பரிசு வவுச்சர்கள் வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுபவர் மற்றும் இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு கூடுதலாக, முறையே ரூ.1,00,000 மற்றும் ரூ.50,000 மதிப்பிலான டிசிஎஸ் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும். மாணவர்கள் செப்டம்பர் 30, 2026-க்குள் <https://iur.ls/TCSRIT/Quiz2026> என்ற இணையதளத்தில் வினாடி வினாவிற்கு பதிவு செய்யலாம்.