தென் தமிழகத்தில் முதல் முறையாக இறந்தவர் உடல் தான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை – காவேரி மருத்துவமனை சாதனை

தென் தமிழத்திலேயே முதல் முறையாக இறந்தவரின் கல்லீரலை தானமாக பெற்று, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது திருநெல்வேலி காவேரி மருத்துவமனை. தீவிர கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளி, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 7 நாட்களில் ஆரோக்கியத்துடன் வீடு திரும்பினார். இந்த சிகிச்சைக்கு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலத்த தலை காயத்தால் மூளைச்சாவடைந்த முதிய பெண்மணி ஒருவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டது.

இறந்தவர் உறுப்பை பொருத்தி நோயாளியை காப்பாற்றிய இந்த வெற்றிகரமான சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சையில் தென் தமிழக மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல் என்றால் அது மிகையாகாது. இதன் மூலம் திருநெல்வேலி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் உயர்தர கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையும் உறுதியாகியுள்ளது. இந்த உறுப்பு மாற்று சிகிச்சையை, மருத்துவமனையின் வயிறு மற்றும் கல்லீரல்-பித்தப்பை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைத் துறையின் மருத்துவர் டாக்டர் செந்தில் ஞானசேகரன் தலைமையிலான குழுவினர் செய்தனர். குழுவில் மயக்கவியல், தீவிர சிகிச்சை, கல்லீரலியல் துறை வல்லுனர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இதுகுறித்து பேசிய டாக்டர் செந்தில் ஞானசேகரன், “தென் தமிழகத்தில் முதல் முறையாக இறந்தவரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை திருநெல்வேலியில் வெற்றிகரமாகச் செய்திருப்பது மகிழ்ச்சியான தருகிறது. ஆபத்தான நிலையில் இருந்த நோயாளி ஏழாவது நாளிலேயே குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது எங்கள் மருத்துவமனையின் நிபுணத்துவத்துக்கும், மருத்துவக்குழுவின் சிறப்பான கூட்டு முயற்சிக்கும் சான்றாகும். இந்த வெற்றியால், தென் மாவட்டங்களில் உள்ள நோயாளிகள் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையை இனி தங்கள் சொந்த பகுதியிலேயே செய்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது,” என்று  தெரிவித்தார்.

இதுவே மூளைச் சாவுக்குப் பிறகு காவேரி மருத்துவமனையில் பெற்ற முதல் உறுப்பு தானமும் ஆகும். துயரமான சூழலிலும் துணிச்சலாகவும், கருணையோடும் உறுப்பு தானம் செய்ய முன்வந்த கொடையாளியின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. அவர்களின் இந்த சுயநலமற்ற செயல், ஒரு குடும்பத்தின் ஈடுசெய்ய முடியாத இழப்பை மற்றவர்களின் உயிரைக் காக்கும் அரிய வாய்ப்பாக மாற்றியுள்ளது.இந்த வெற்றிகரமான உறுப்பு மாற்று சிகிச்சை, ஒரு மருத்துவ சாதனை மட்டுமல்லாது, உறுப்பு தானத்தின் மகத்துவம், மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த சேவை ஆகியற்றின் முக்கியத்துவத்தையும் குறிக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form