பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலில் இருந்து வரும் தகுதியுடைய மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக, வட்டி இல்லாத கல்விக்கடன்களை வழங்கும் தனது உன்னதப் பணியைத் டிவிஎஸ் சீமா ஸ்காலர்ஷிப் பவுண்டேஷன் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் இந்த ஆண்டும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
டிவிஎஸ் குழுமத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவான 'சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்' ஆற்றி வரும் சமூகப் பணிகளால் ஈர்க்கப்பட்டுத் தொடங்கப்பட்ட இந்த பவுண்டேஷன், தரமான கல்வியின் மூலம் வருங்காலத் தலைமுறையினருக்குப் புதிய நல்வாய்ப்புகளை உருவாக்குவதையும் அவர்களைத் தற்சார்புடையவர்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
கடந்த முப்பது ஆண்டுகாலமாக, சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் ஐந்து மாநிலங்களில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுடன் இணைந்து, கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கால்நடை மேம்பாடு, நீர் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய துறைகளில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உள்ளூர் மக்களின் பங்களிப்பு, அவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் நீண்டகாலத் தற்சார்பு நிலை ஆகியவற்றை தனது சமூக சார்ந்த அணுகுமுறையின் முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சமூக அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, டிவிஎஸ் சீமா ஸ்காலர்ஷிப் பவுண்டேஷன் பொறியியல், நர்சிங் மற்றும் டிப்ளமோ படிப்புகளைப் பயிலும் மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்விக்கடன்களை வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் நர்சிங் படிப்புகளைப் பயிலும் மாணவர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த கல்விக்கடன் மாணவர்களின் ஒட்டுமொத்தப் படிப்பு காலத்திற்கும் முழுமையாக வழங்கப்படும். இக்கடனைப் பெறுவதற்கு எவ்விதப் பிணையமும் தேவையில்லை. நிர்வாக ஒதுக்கீடு அல்லது 7.5% அரசுப் பள்ளி உள்ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. படிப்பை முடித்து, வேலைக்குச் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எளிய தவணைகள் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கலாம்.
2026, 27 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் 2026 ஆகஸ்ட் 31 வரை வரவேற்கப்படுகின்றன. தகுதி மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்த முழு விவரங்களையும் www.tvscsf.org <http://www.tvscsf.org>. இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் பவுண்டேஷனின் பிரத்தியேக உதவி எண் 011-43146600 ஐத் தொடர்பு கொள்ளலாம்.
