திருச்சிராப்பள்ளியில் உள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை அப்பகுதியில் உள்ள நலிவுற்ற பள்ளி மாணவர்களிடையே கண்டறியப்படாத பார்வைக் குறைபாடுகளை பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகாலச் சமூகக் கண் சிகிச்சை முன்முயற்சியின் மூலம் எளிதில் பெறக்கூடிய உயர்தரக் கண் சிகிச்சையை சமூகத்தில் நலிவுற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்ற தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஷிவ் பகத் குடும்பத்தினர், தங்களின் மறைந்த அன்பு மகன் அனிஷின் நினைவாக மேக்சிவிஷன் மருத்துவமனையுடன் இணைந்து இந்த அர்த்தமுள்ள உன்னதமான திட்டத்தைத் தொடங்கினர். சமூகத்தில் நலிவுற்ற எளிய பின்னணியைக் கொண்ட குழந்தைகள் சரியான நேரத்தில் கண் பரிசோதனைகளைப் பெற்று, எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பார்வைக் கண்ணாடிகளை அடைவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. இது மாணவர்கள் சிறந்த பார்வையைப் பெறவும், கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையில் பார்வைக் குறைப்பாட்டிலிருந்து மீண்டு தடையில்லாமல் வாய்ப்புகளை பெறவும் வழிவகுக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், மேக்சிவிஷன் மருத்துவ இயக்குநரான டாக்டர் ஷிபு வர்கேயின் வழிகாட்டுதலின் கீழ், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஜி. சகுந்தலா மேல்நிலைப் பள்ளி, இ.ஆர். மேல்நிலைப் பள்ளி மற்றும் பொன்னையா பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2,250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விரிவான கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த ஆரம்பக்கட்டக் கண்டறிதல் சோதனைகளின் விளைவாக, பார்வைக் குறைபாடுள்ள 150-க்கும் மேற்பட்ட தகுதியான மாணவர்களுக்கு எவ்விதக் கட்டணமுமின்றி பிரத்தியேகப் பார்வைக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை ஒட்டுமொத்தமாக 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், தேவையுள்ள குழந்தைகளுக்கு 600-க்கும் அதிகமான விலையில்லாப் பார்வைக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு குறித்து மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் தமிழ்நாடு மண்டல மருத்துவ இயக்குநர் டாக்டர் ஷிபு வர்கே பேசுகையில், " கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஒவ்வொரு கண் பரிசோதனை மற்றும் ஒவ்வொரு பார்வைக் கண்ணாடி மூலம் அந்த யதார்த்தத்தை மாற்றுவதில் நாங்கள் உறுதியாகச் செயல்பட்டு வருகிறோம். எங்களது நோக்கம் வெறும் பரிசோதனை மற்றும் கண்ணாடிகளை வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை; மாறாகக் குழந்தைகள் வகுப்பறைப் பலகையைத் தெளிவாகப் படிக்கவும், பாடங்களில் தன்னம்பிக்கையுடன் பங்கேற்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் நாங்கள் உறுதுணையாக இருக்க விரும்புகிறோம். தவிர்க்கக்கூடிய பார்வைக் குறைபாடுகளினால் ஏற்படும் தடைகளின்றி தங்களது படிப்பைத் தொடரச் செய்ய உதவுவதே எங்களின் முதன்மை இலக்காகும். இத்திட்டத்தின் எல்லையை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தும் வேளையில், தடுக்கக்கூடிய ஒரு பார்வைக் குறைபாட்டால் எந்தவொரு குழந்தையின் திறமையும் முடங்கிவிடக் கூடாது என்பதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.