உலகத் தமிழர் தொழில் வணிக சங்கமம். ஜூலை 24, 25 நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது



உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியா சுதந்திர வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகளிலிருந்தும், பெங்களூரு - கோவா - மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்தும், தமிழகத்தின் அனைத்து தொழில் - வணிக நகரங்களிலிருந்தும் 500-க்கும் மேலான தமிழ் தொழிலதிபர்கள் - வணிகர்கள் கலந்து கொள்கிற மாபெரும் உலகத் தமிழர் தொழில் வணிக சங்கமம் வரும் ஜூலை 24, 25 நாட்களில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஹில்ட்டன் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. 

தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் என்ற அமைப்பு நடத்தும் இம் மாநாட்டில் நூற்றுக்கும் மேலான தொழில் வணிகப் பரிமாற்றங்களும், ஒப்பந்தங்களும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்க விரும்புகிறவர்கள் www.ctacis.in இணைய தளம் மற்றும் +919150060430 / 431 தொலைபேசி எண் வழியாகப் பதிவு செய்யலாம்.

தமிழகத்தின் ஒரு நகரிலிருந்து பிற நகரங்களுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், உலகச் சந்தைகளுக்கும் தமது உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் விரிவுபடுத்த "தமிழர் 4.0" எனப் பெயரிடப்பட்டுள்ள மாபெரும் இத் தொழில் வணிகச் சங்கமம் உதவியாக அமையும். இம் மாநாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் - வணிகத் தமிழர்கள் வருகிறார்கள்.  குறிப்பாக இந்தியா சுதந்திர வணிக ஒப்பந்தம்  செய்து கொண்டுள்ள அமீரகம், ஓமான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்தும், தமிழகம் நெருங்கிய தொழில் - வணிக உறவுகள் கொண்டுள்ள மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஓமான், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் தொழில் - வணிகத் தமிழர்கள் வருவது மிகப்பெரிய வாய்ப்பாகும்.

மாஃபா பாண்டியராஜன், 'நேச்சுரல்ஸ்' சி.கே குமரவேல் போன்ற பல வெற்றித் தொழிலதிபர்களிடமிருந்தும், நிதி - சந்தை - முதலீடு - வங்கித் துறை போன்றவற்றில் நிபுணத்துவம் கொண்ட 'மணி பேச்சு' ஆனந்த் ஸ்ரீனிவாசன், முன்னாள் கனரா வங்கி இயக்குனர் மணிமாறன், முன்னாள் ரிசர்வ் வங்கி அதிகாரி ஹரி கிருஷ்ணன் போன்றவர்களிடமிருந்தும் தொழில் வெற்றி உத்திகள், நிதி திரட்டும் வழிகள் உள்ளிட்ட நுட்பமும் அனுபவமும் மிக்க அறிவினைப் பெறுவதற்கும் தமிழர் 4.0 மாநாடு வழி செய்கிறது.

தமிழக அரசின் சிறு - குறு - நடுத்தர தொழில் அலுவலகத்தின் சார்பில் நந்தகுமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் பூர்ணிமா, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வளர்ச்சி கழகத்தின் திரு. அன்புராஜ், தேசிய சிறு தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல ஒன்றிய - தமிழக அரசுத் துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று இத் துறைகள் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கின்றன, எவ்வாறு தமிழக தொழில் - வணிகச் சமூகத்திற்கு உதவ முடியும் என்பதை எடுத்துரைப்பார்கள்.

தமிழரின் வரலாற்றுப் பயணத்தை நான்கு காலகட்டங்களாக வகுத்து இம் மாநாட்டிற்கு "தமிழர் 4.0" எனப் பெயர் சூட்டியுள்ளது தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம். தமிழும் அறமும் வளர்ந்த மூன்றாம் சங்கம் வரையான காலத்தை தமிழர் 1.0 எனவும்; பேரரசு உருவாக்கியும், கடல் வணிக வழிகள் கட்டமைத்தும், வேளாண்மை - நீர் மேலாண்மை அடிப்படைக் கட்டுமானங்கள் உருவாக்கியும் சிறந்த சேர - சோழ - பாண்டிய அரசுகளின் காலத்தை தமிழர் 2.0 எனவும்; வள்ளலார் சுவாமிகள், தந்தை பெரியார், கர்ம வீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா என விரிந்த சமூக நீதித் தேடல், கல்விப் பரவலாக்கத்தின் காலத்தை தமிழர் 3.0 எனவும்; தொழில், வணிகம், அறிவுத் துறைகளில் வெல்வதன் மூலம் பொருளாதாரத் தன்னிறைவு - உயர் கல்விச் சிறப்பு - உலக மதிப்பு - மொழி, கலை, பண்பாடு உள்ளிட்ட பன்முகப் புலங்களில் மாபெரும் மறுமலர்ச்சி என்ற தமிழ்க் கனவின் காலத்தை தமிழர் 4.0 எனவும் வகுக்கிறது இம் மாநாடு.


புதிதாக அமைந்திருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கு சில முக்கிய வேண்டுதல்களையும் தமிழர் 4.0 தொழில் வணிக மாநாடு முன் வைக்கிறது. அவையாவன:

1. தமிழக அரசின் திட்டங்களுக்குத் தேவையான பொருட்கள் சேவைகள்; அரசு அலுவலகங்கள் - நிறுவனங்களுக்குத் தேவையான பொருட்கள் - சேவைகள் 70% தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சிறு - குறு நடுத்தர தொழில் - முனைவோரிடமிருந்தே பெறப்படவேண்டுமென்று அரசாணை பிறப்பிக்கவும், அதற்கேற்றப்படி விதிமுறைகளை சீரமைக்கவும் தமிழக அரசை தமிழர் 4.0 மாநாடு கேட்டுக் கொள்ளும்.

2. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகையில்   நிபந்தனைகளாக 70% பணியாளர்கள் தமிழர்களாக இருக்க வேண்டுமென்பதையும், அந்நிறுவனங்களுக்குத் தேவைப்படும் சேவையாளர்கள் 70% தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறு - குறு நடுத்தர தொழில் நிறுவனங்களாக இருக்க வேண்டுமென்பதையும் ஒப்பந்தங்களிலேயே உள்ளடக்க வேண்டும் என தமிழர் 4.0 மாநாடு வேண்டிக் கொள்ளும்.

3. தமிழக அரசின் ஒப்பந்தங்கள் (Tenders) 70% தமிழகத்தின் - தமிழர்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கே வழங்கப்படும்என்று கொள்கை முடிவு எடுக்கவும், அதற்கான அரசாணை பிறப்பிக்கவும், இந்த ஆணை சரிவர நிறைவேற்றப்படுவதை இணைய தளத்திலேயே வெளியிடவும் தமிழக அரசை தமிழர் 4.0 மாநாடு கேட்டுக் கொள்ளும்.

4. சிறு - குறு தொழில்களுக்கு GST வரி அளவை குறைப்பது காலத்தின் அவசர தேவையாகும். அதைவிட GST கட்டத் தவறியவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் கொடூரமானதும் அராஜகமானதும் ஆகும். இந்த இரண்டிலும் தமிழக அரசு ஒன்றிய அரசிடம் பேசி GST அளவை குறைக்கவும், கட்டத் தவறியதை அபராதமின்றி திருப்பிக்கட்ட குறைந்தபட்சம் 12 மாத காலம் வரை அவகாசம் வழங்கவும், லாபம் இன்றி இழப்பில் நடக்கும் சிறு - குறு - நடுத்தர தொழில்கள் எனில் முழுதாக அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்கவும் தமிழக - ஒன்றிய அரசுகளை  தமிழர் 4.0 மாநாடு கேட்டுக் கொள்ளும்.

5. பொதுவாகவே சிறு - குறு தொழில் முனைவோரிடமிருந்து வாங்கும் திறன் கொண்ட பெரிய நிறுவனங்களுடன் கட்டமைக்கப்பட்ட தொடர்புகள் - உறவு ஒழுங்குகள் நடைமுறையில் இல்லாதது பெரிய குறையாகும். இந்த ஏற்பாட்டினை தமிழக அரசின் சிறு - குறு - நடுத்தர தொழில்களுக்கான அமைச்சும், தொழில் துறை அமைச்சும் இணைந்து செய்தால் நூற்றுக் கணக்கான சிறு - குறு - நடுத்தர தொழில்கள் பயன் பெறும். எனவே இந்த ஏற்பாட்டினை உடனடியாகச் செய்திடுமாறு தமிழர் 4.0 மாநாடு கேட்டுக் கொள்ளும்.

6. இந்தியா உலகின் பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வணிக (Free Trade) ஒப்பந்தங்கள் செய்து வருகிறது. இதனால் நம்மவர்களின் உற்பத்தி மற்றும் சேவைகள் உலகச் சந்தைக்குள் நுழையும் வாய்ப்புகள் விரிகின்றன. ஆனால் இதனை நெறிசெய்து, வழிகாட்டி துணை நிற்க வலிமையான அலுவலகங்கள் இல்லை. அத்தகைய அலுவலகங்களை சென்னை - கோவை - ஓசூர் - திருச்சி - மதுரை - திருநெல்வேலி - சேலம் - ஈரோடு - திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், இந்தியா சுதந்திர வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகளிலும் அமைத்து தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு உதவும்படி தமிழக அரசினை தமிழர் 4.0 மாநாடு கேட்டுக் கொள்ளும்.

7. தமிழர் உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் நிறுவனங்களையும் ஆதரிக்கும் கூட்டுறவு மனநிலை உலகத் தமிழரிடையே உருவாகி வலுப் பெற்றால் அது தமிழரிடையே வலுவான கூட்டுறவுப் பண்பாடும், ஒத்துழைப்பால் நிகழும் தொழில் வணிக வளர்ச்சியும் சாத்தியமாகும். இத்திசையில் இணைந்த முயற்சிகள் மேற்கொண்டிட உலகத் தமிழ் அமைப்புகளை, சங்கங்களை தமிழர் 4.0 மாநாடு கேட்டுக் கொள்ளும்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form