சென்னையில் CTACIS அமைப்பின் உலகத் தமிழர் 4.0 இரண்டு நாள் தொழில் வணிக மாநாடு துவங்கியது

உலகளவில் வளர்ந்து நிற்கும் தொழில் வணிகப் பேரமைப்பான தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றத்தின் (CTACIS - Confederation of Tamil Agriculture commerce Industry and Services) தமிழர் 4.0 வணிக சங்கமம் இரண்டு நாள் மாநாடு சென்னையில் 24-07-2026 அன்று ஹில்டன் ஹோட்டலில் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.டி.சி.பிரபாகர்  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

இரண்டு நாட்கள்  நடைபெறும் இம்மாநாட்டில்  நூற்றுக்கும் மேலான தொழில் வணிகப் பரிமாற்றங்களும், ஒப்பந்தங்களும் நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியா, சுதந்திர வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகளிலிருந்தும், பெங்களூரு - கோவா - மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்தும், தமிழகத்தின் அனைத்து தொழில் - வணிக நகரங்களிலிருந்தும் 500-க்கும் மேலான தமிழ் தொழிலதிபர்கள் - வணிகர்கள் கலந்து கொண்டனர். இது மாபெரும் உலகத் தமிழர் தொழில் வணிக சங்கமமாக அமைந்துள்ளது.

தமிழகத்தின் ஒரு நகரிலிருந்து பிற நகரங்களுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், உலகச் சந்தைகளுக்கும் தமது உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் விரிவுபடுத்த "தமிழர் 4.0" எனப் பெயரிடப்பட்டுள்ள மாபெரும் இத் தொழில் வணிகச் சங்கமம் உதவியாக அமையும். இம்மாநாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் - வணிகத் தமிழர்கள் வந்துள்ளனர்.

குறிப்பாக இந்தியா சுதந்திர வணிக ஒப்பந்தம் (Free Trade Agreement) செய்து கொண்டுள்ள அமீரகம், ஓமான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்தும், தமிழகம் நெருங்கிய தொழில் - வணிக உறவு கொண்டுள்ள மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் தொழில் - வணிகத் தமிழர்கள் இம்மாநாட்டிற்கு வந்திருப்பது மிகப்பெரிய தொழில் வாய்ப்பாக அமைந்துள்ளது.

 நிகழ்ச்சியில் CTACIS, நிறுவனர் ஜெகத் கஸ்பர் ராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்  சவுகத் அலி, டாக்டர் அன்சாரி வாஹித், அமீரகம், ஓமானைச் சேர்ந்த  ஜோஸ் மைக்கில் ராபின்,  ஆல்பிரட் பெர்க்மென்ஸ், அமீரகம்,  கேந்திரன், திருப்பூர், CTACIS, தலைவர், இளங்கோவன், வோர்ட்ஸ்வொர்த் அய்யாதுரை, அமெரிக்கா, CTACIS, செயலாளர், அன்பழகன், CTACIS, துணைத் தலைவர், ராஜேந்திரன், CTACIS, பொருளாளர், முருகன், CTACIS, துணைத்தலைவர், சரவணன், CTACIS, முத்தமிழ்  விஷ்வா, CTASIS, இணைச் செயலாளர்  நந்த குமார், CTACIS, சிகரம் ஹரி கிருஷ்ணன், CTACIS, சிகரம் செந்தில் நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அரசுத் திட்டங்களும் தொழில் வணிகச் சமூகத்திற்கான பன்முக வாய்ப்புகள், ஆற்றலும் அனுபவமும் பெற்ற வெற்றியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ள தொழில் வணிக வாய்ப்புகள், வெளிநாட்டு ஏற்றுமதி-இறக்குமதி, பெண்கள் தலைமைத்துவத்தின் காலம் குறித்த பல ஊடாடும் அமர்வுகள் இரண்டு நாட்களும் நடைபெறுகிறது. 

பிற்பகலில் நடந்த நிகழ்வில் மாஃபா திரு. பாண்டியராஜன், 'நேச்சுரல்ஸ்' திரு. C.K. குமரவேல்,  'மணி பேச்சு' திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டுக் கழக இயக்குனர் அகிலா ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். 

நாளை (25-07-2026) நடைபெறும் நிகவில் எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.விஜயகுமார், பி.ரேவந்த் சரண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

"தமிழரின் வரலாற்றுப் பயணத்தை நான்கு காலகட்டங்களாக வகுத்து இம் மாநாட்டிற்கு "தமிழர் 4.0" எனப் பெயர் சூட்டியுள்ளது தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம். தமிழும் அறமும் வளர்ந்த மூன்றாம் சங்கம் வரையான காலத்தை தமிழர் 1.0 எனவும்; பேரரசு உருவாக்கியும், கடல் வணிக வழிகள் கட்டமைத்தும், வேளாண்மை - நீர் மேலாண்மை அடிப்படைக் கட்டுமானங்கள் உருவாக்கியும் சிறந்த சேர - சோழ - பாண்டிய அரசுகளின் காலத்தை தமிழர் 2.0 எனவும்; வள்ளலார் சுவாமிகள், தந்தை பெரியார், கர்ம வீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா என விரிந்த சமூக நீதித் தேடல், கல்விப் பரவலாக்கத்தின் காலத்தை தமிழர் 3.0 எனவும்; தொழில், வணிகம், அறிவுத் துறைகளில் வெல்வதன் மூலம் பொருளாதாரத் தன்னிறைவு - உயர் கல்விச் சிறப்பு - உலக மதிப்பு - மொழி, கலை, பண்பாடு உள்ளிட்ட பன்முகப் புலங்களில் மாபெரும் மறுமலர்ச்சி என்ற தமிழ்க் கனவின் காலத்தை தமிழர் 4.0 எனவும் வகுக்கிறது இம் மாநாடு, என்று CTACIS நிறுவனர் அருட் தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form