லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6-வது சீசன் ஜூலை 10-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த லீக்கிற்கு முக்கியமான நிதியாக பல மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்துள்ளது.
எல்பிஎல் தொடரின் புரமோட்டர்களான இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குரூப் எஃப்இசட், எல்எல்சி அமெரிக்காவை தளமாகக் கொண்ட பட்டியலிடப்பட்ட நிறுவனத்திடமிருந்து பல மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதி ஆதரவைப் பெற்றுள்ளது.
ஐபிஜி நிறுவனம், ஃபிளாஷ் ஸ்போர்ட்ஸ் & மீடியா இன்க். நிறுவனத்துடன் தனது மூலோபாய பங்கு பரிமாற்ற இணைப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம், எல்பிஎல் உட்பட அதன் டி20 லீக் வணிக உரிமைகள் தொகுப்பு, நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள யுஜிஆர்ஓ தளத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றம், ஐபிஜி மற்றும் அது நிர்வகித்து வரும் லீக்குகளுக்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. விரிவான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பொது நிர்வாக கட்டமைப்பின் கீழ் நிறுவனம் இடம்பெறுவதற்கு இது வழிவகுத்துள்ளது. இந்த புதிய நிறுவன கட்டமைப்பின் ஆதரவுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் லங்கா பிரீமியர் லீக்கை மேலும் பிரமாண்டமாகவும், உயர்தரமாகவும் உருவாக்கும் நோக்கில் ஐபிஜி நிறுவனம் 2 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளது.
லங்கா பிரீமியர் லீக்கைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட புதிய கட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. LPL-ன் அறிவுசார் சொத்து உரிமைகள் இலங்கை கிரிக்கெட்டின் வசம் தொடர்ந்தாலும், அதன் பிரத்யேக வணிக மற்றும் ஊடக உரிமைகளை ஐபிஜி நிறுவனம் தொடர்ந்து வைத்திருக்கும். இவை தற்போது நிறுவன ரீதியிலான முதலீட்டு ஆதரவு, மேம்படுத்தப்பட்ட நிர்வாகத் தரநிலைகள் மற்றும் நீண்டகால விரிவாக்கத் திட்டங்களின் துணையுடன் வலுப்பெற்றுள்ளன.
இதுகுறித்து ஐபிஜி குளோபல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் அனில் மோகன் கூறுகையில், “இந்த புதிய முன்னேற்றத்தின் மிகப்பெரிய பயனாளியாக லங்கா பிரீமியர் லீக் அமையும். பொது நிர்வாக கட்டமைப்பின் கீழ் இணைக்கப்பட்டிருப்பது, லீக்கை பொறுப்புடனும் நிலையான முறையிலும் விரிவுபடுத்தும் எங்களின் திறனை மேலும் வலுப்படுத்துகிறது. அதிகரிக்கப்பட்ட வெளிப்படைத்தன்மை, மூலதன அணுகல் மற்றும் மேம்பட்ட நிர்வாகத் தரநிலைகளின் மூலம், நீண்டகால வணிக ஒழுங்குமுறையைப் கடைபிடிப்பதுடன், பிரான்சைஸ்களின் மதிப்பை உயர்த்தும் வகையில் வளர்ச்சியை முன்னெடுக்கக்கூடிய நிலையில் நாங்கள் உள்ளோம்” என்றார்.
லங்கா பிரீமியர் லீக்கைத் தவிர, மலேசியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் டி20 லீக்குகளை உருவாக்குவதற்கான நீண்டகால பிரத்யேக ஒப்பந்தங்களையும் ஐபிஜி குழுமம் பெற்றுள்ளது. இந்த வேகமாக வளர்ந்து வரும் கிரிக்கெட் சந்தையில் தனது தடத்தை விரிவுபடுத்தும் நோக்கில், இந்த புதிய லீக்குகளிலும் முதலீட்டாளர்களுடன் இணைந்து விரிவாக்கத் திட்டங்களை ஐபிஜி நிறுவனம் வகுத்துள்ளது.
தனித்தனி தொடர்களை தெற்காசியா மற்றும் பிற வளர்ந்து வரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த, பல்வேறு சந்தைகளைத் தழுவிய கிரிக்கெட் வணிக அமைப்பாக மாற்றியமைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதுகுறித்து ஃபிளாஷ் ஸ்போர்ட்ஸ் & மீடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிராட்லி நட்ராஸ் கூறுகையில், “இந்த இணைப்பு, பல்வேறு கிரிக்கெட் சந்தைகளில் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக எங்களது செயல்பாடுகளை வேகமாக முன்னெடுக்க உதவும் என நாங்கள் நம்புகிறோம். மையப்படுத்தப்பட்ட வணிகக் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பிரான்சைஸ் ஊக்குவிப்புகளின் மூலம், ஆழமான ஸ்பான்சர் ஒருங்கிணைப்பு, வலுவான ஒளிபரப்பு கூட்டாண்மைகள் மற்றும் பல்வேறு சந்தைகளில் ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது, செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்துவது, தளத்தை வேகமாகவும் துல்லியமாகவும் விரிவுபடுத்துவது மற்றும் நீண்டகால பங்குதாரர் மதிப்பை உருவாக்குவதே எங்களின் முக்கிய கவனமாக உள்ளது” என்றார்.
இதுகுறித்து ஃபிளாஷ் ஸ்போர்ட்ஸ் & மீடியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எரிக் ஷெர்ப் கூறுகையில், “பொது சந்தை கட்டமைப்பு, முதலீட்டின் மீதான வருவாய் (ROI) தொடர்பான கடுமையான ஒழுங்குமுறையைப் கடைபிடிக்கும் அதே வேளையில், லீக் கட்டமைப்புகளுக்கான முதலீட்டை பல கட்டங்களாக மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. எங்களது முக்கிய கவனம் நீண்டகால வணிக வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும், எங்களது சொத்து தொகுப்பில் தொடர்ச்சியான வருவாய் ஆதாரங்களை உருவாக்குவதிலும் இருக்கும்” என்றார்.
ஒருங்கிணைந்த வணிக வருவாய் ஈட்டல் தளத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். நீண்டகால சொத்து மதிப்பு உயர்வை ஏற்படுத்துவது, பல்வேறு லீக்குகளுக்கான ஸ்பான்சர்ஷிப் வருவாயை மையப்படுத்துவது, ஒளிபரப்பு தயாரிப்புகளை 4K தரநிலைக்கு மேம்படுத்துவது மற்றும் கணிக்கக்கூடிய, தொடர்ச்சியான வருவாய் ஆதாரங்களை உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என ஐபிஜி நிறுவனம் அறிவித்துள்ளது.