ஆட்டிசம் கொண்ட 4 குழந்தைகள் இந்தியா-இலங்கை இடையே 60 கி.மீ கடலில் நீச்சல் செய்து உலக சாதனை

 


ஆட்டிசம் கொண்ட நான்கு சிறுவர் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பால்க் நீரிணையை கடந்து 60 கிலோமீட்டர் இருவழி திறந்த கடல் நீச்சல் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.  “Waves of Hope - India ↔ Sri Lanka Two-Way Sea Swim” எனப் பெயரிடப்பட்ட இந்த முயற்சி, யாதவி அறக்கட்டளை மற்றும் சிறப்பு தேவைகளுக்கான யாதவி  விளையாட்டு அகாடமி மற்றும் இந்தியன் ஆட்டிசம் செண்டர் உடன் இணைந்து நடத்தியது. 

இந்த நீச்சல் முயற்சி 2026 ஏப்ரல் 18ஆம் தேதி அரிச்சல் முனை கடற்கரையில் மதியம் 03.30 மணியளவில்  தொடங்கி, ஏப்ரல் 19ஆம் தேதி காலை 09.27க்கு நிறைவு செய்தனர். இந்த சாதனை முயற்சியை வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் யுகே (World Book Of Records UK) மூலம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தனர்.

மாஸ்டர் குண்டூரு லாவ், குண்டூரு குஷ், மாஸ்டர் மேகா ஸ்ரீ அஸ்வத் மற்றும் மாஸ்டர் தன்வேஷ் என் ஆகியோருக்கு, உலக சாதனைப் புத்தகத்தின் பட்டய அதிகாரிகளான டாக்டர் சுசிதா சுக்லா, டாக்டர் பிரியங்கா சுக்லா மற்றும் டாக்டர் திதி சுக்லா ஆகியோரால் சான்றிதழ் வழங்கப்பட்டது.




யாதவி சிறப்புத் தேவைகளுக்கான விளையாட்டு அகாடமிக்கு, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பிற முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஸ்ரீ அஷ்வத், லவ், குஷ் மற்றும் தன்வேஷ் ஆகிய 9 முதல் 11 வயதுடைய குழந்தைகள் 24 மணி நேரம் இடையறாத ரிலே முறையில் இந்தியா → இலங்கை → இந்தியா பாதையில் நீந்தினர். இந்த முயற்சியின் போது, கடுமையான கடல் நீரோட்டங்கள், மாற்றமடையும் காலநிலை மற்றும் இரவு நேர நீச்சல் போன்ற பல சவால்களை எதிர்கொண்டனர். கடந்த எட்டு மாதங்களாக, இக்குழந்தைகள் நீச்சல் குளங்களிலும் திறந்த கடல் சூழலிலும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு இந்த சாதனைக்கு தயாராகினர்.

“Waves of Hope” என்பது ஒரு சாதனை முயற்சி மட்டுமல்ல. இது சமூகத்தின் மனப்பாங்கை மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும். ” முடியாது என்பது இல்லை” என்பதே இந்த முன்முயற்சியின் கருப்பொருள் ஆகும். இதன் மூலம் ஆட்டிசம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்துவது, சமூகத்திற்கு உண்மையான சாதனைகளை அறியச் செய்து  ஊக்கமளிப்பது மற்றும் மக்களின் ஓட்டுரிமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சிக்கு சென்னை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை முழுமையான மருத்துவ மற்றும் பாதுகாப்பு ஆதரவை வழங்குகியது. அவசர மருத்துவ சேவைகள், அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் தொடர்ந்து உடல்நிலை கண்காணிப்பு போன்ற அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதுகாப்பு குழு, பயிற்சியாளர்கள் மற்றும் படகு குழுவினர் முழு நேரமும் இணைந்து செயல்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.

யாதவி சிறப்புத் தேவைகள் விளையாட்டு அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளரான சதீஷ் சிவகுமார் கூறுகையில், “இந்த நீச்சல் போட்டி என்பது வெறும் தூரத்தைப் பற்றியது மட்டுமல்ல - இது மக்களின் கண்ணோட்டங்களை மாற்றுவதைப் பற்றியது ஆகும். திறமை என்பது வரம்புகளைக் கடந்தது என்பதை இந்த குழந்தைகள் உலகிற்கு நிரூபித்து வருகிறார்கள். ‘Waves Of Hope’ என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும், ஒவ்வொரு கல்வியாளருக்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு செய்தியாகும் - சரியான ஆதரவுடன், ஒவ்வொரு குழந்தையும் அசாதாரணமானதைச் சாதிக்க முடியும் என்பதே ஆகும்” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form