மதுரையில் அக்டோபர் 5ம்தேதி (சனிக்கிழமை) டிஜிட்ஆல் சங்கமம் 2024 முழுநாள் கருத்தரங்கு நடக்கிறது. ஏர்செல் நிறுவனர் சி.சிவசங்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸின் ஒரு அங்கமான டிஜிட்ஆல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்ஆல் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியை வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முழுநாள் உச்சி மாநாடாக டிஜிட்ஆல் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான டிஜிட்ஆல் சங்கமம் கருத்தரங்கு வருகிற 5ம்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.
இதுபற்றி டிஜிட்ஆல் அமைப்பின் தலைவர் ஜே.கே.முத்து கூறுகையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புதிய மாற்றங்களையும், பயன்களையும் தொழில் வணிக வளர்ச்சிக்கும், தனிமனித மேம்பாட்டிற்கும் வழங்கும் நோக்கில், முன்னாள் குடியரசு தலைவர் மேதகு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களால் 18-07-2015 அன்று துவங்கப் பெற்று, 100 ஆண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒரு அங்கமாக டிஜிட் ஆல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்ஆல் சங்கமம் முழுநாள் கருத்தரங்கை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டும் வழக்கம்போல சிறப்பான விழாவாக சங்கமம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு டிஜிட்ஆல் சங்கமம் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ஏர்செல் சிவசங்கரன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, தொழில் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து பேசுகிறார். அதன்பிறகு அமேசான் வெப் சர்வீசஸ் மூலம் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றங்கள் குறித்து அமேசான் வெப் சர்வீசஸ் தலைவர் தனசிங் பேசுகிறார். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் அடுத்த அத்தியாயம் குறித்து ஜெயபிரகாஷ் காந்தி பேசுகிறார். நிகழ்ச்சியில் பேசும் சிறப்பு விருந்தினர்களிடம் பார்வையாளர்கள் கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது” என்றார்
அவர் மேலும் பேசுகையில், “அடுத்து வரவிருக்கும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து மவுனியம் ஏஐ நிறுவனர் செந்தில் நாயகம், பீப்புள்டெக் நிறுவனர் ஜி.சுரேஷ்குமார், அமேசான் வெப் சர்வீசஸ் பிரவீன் ஜெயகுமார், ஸ்டார்ட்நெட் நிறுவனர் எம்.கே.இளங்கோ ஆகியோர் விவாதிக்க உள்ளனர். இந்த விவாத களத்தை ஜியோ வியோ தலைமை நிர்வாக அதிகாரி எம்.செந்தில்குமார் ஒருங்கிணைக்கவிருக்கிறார். அதேப்போல அந்த நாலு பேருக்கு நன்றி என்ற தலைப்பில் ப்ளாக்ஷிப் நிறுவனத்தின் சிஇஓ பாலகிருஷ்ணன் பேசுகிறார். மேலும் டிஜிட்டல் மாற்றத்தின் வெற்றிக் கதைகள் குறித்து போரம் ஆப் டிஜிட்டல் பாலிடிக்ஸ் தேசிய செயலாளர் தேடல் ஆனந்தன், சத்யம் குரூப் ஆப் கம்பெனிகளின் நிறுவனர் சத்யம் வி. செந்தில்குமார், இப்போ-பே இணை நிறுவனர் மோகன் கருப்பையா, வர்த்தக ஆலோசகர் மணிமாறன் ராமலிங்கம் ஆகியோர் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் டிஜிட்டல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சவால்கள் குறித்து தமிழ்நாடு அரசின் பேக்ட் செக் பிரிவின் மிஷன் டைரக்டர் அயன் கார்த்திகேயன் பேசுகிறார். விழாவின் நிறைவுரையாக ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று டிஜிட்டல் துறையில் ஸ்டார்ட் அப் வாய்ப்புகள் குறித்து உரையாற்றுகிறார்” என்றார்.