வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் சங்கரன்கோயிலில் வருகிற 6ம் தேதி மாபெரும் போதை ஒழிப்பு பேரணி



தென்காசி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக உருவாக்க போதை இல்லா தென்காசி மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கரன்கோயிலில் வருகிற 6ம்தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தென்காசி மாவட்டத்தில் மாற்றத்தை உருவாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  இந்த போதை இல்லா தென்காசி எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணி மற்றும் பொதுக் கூட்டம் குறித்து வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களது வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் தென்காசி மாவட்ட இளைஞர்கள் நலனுக்காக பல்வேறு சமூக செயல்பாடுகளைச் செய்து வருகிறது. போதையற்ற இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு போதை இல்லா தென்காசி என்ற பெயரில் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை சங்கரன்கோயிலில் வருகிற 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்த உள்ளோம்.  இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் மரியாதைக்குரிய திரு.ஆர்.என்.ரவி அவர்கள் பங்கேற்று பேரணியில் மக்களோடு மக்களாக நடந்து, பொதுக் கூட்டத்தில் விழா பேரூரை ஆற்றுகிறார். ஆளுநரோடு ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிராமங்களின் பாதுகாவலர் ஸ்ரீதர் வேம்பு, மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சைதை துரை துரைசாமி உள்ளிட்டோரும் பேரணியில் நடக்கவுள்ளனர். 

2032ம் ஆண்டுக்குள் ஆசியாவின் எஸ்டோனியாவாக (வளர்ந்த தென்காசி) மாற்றுவதும் இளைஞர்கள், மாணவர்களை வலுப்படுத்தி ஒரு வளமான  சமூகத்தை உருவாக்குவதுமே வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷனின் இலக்கு ஆகும்.  இன்று அதிகரித்துள்ள போதையின் தாக்கம் ஒரு பெரிய  சவாலாக உள்ளது. இந்த பேரணி நமது சமூகத்தை ஒன்று சேர்த்து, போதைப் பழக்கத்தின் அச்சுறுத்தலை கண்டறிந்து ஒழிப்பதற்கான அழைப்பாகும். அனைவரும் போதையில்லா சமூகத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேரணியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்து முன்பதிவு செய்துள்ளனர். போதையற்ற தென்காசி மாவட்டத்தை உருவாக்க வேண்டும்  என்ற ஒத்த கருத்துடைய அனைவரும் இந்த பேரணியின் மூலம் ஒன்றிணைய வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன், என்றார்.

அவர் மேலும் கூறுகையில், அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையத்தில் பேரணி தொடங்குகிறது. அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான திருவேங்கடம் ரோடு, யுபிவி மைதானம் (சிகரம் கடலை எண்ணெய் ஆலை அருகில்) வரை பேரணி நடக்கிறது. அதன் பின்னர் மதியம் 12 மணியளவில் பொதுக்கூட்டம் நடக்கிறது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வருவோர் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பேரணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்.

போதை ஒழிப்பு பேரணிக்கான ஏற்பாடுகளை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் ரோட்டரி க்ளப் ஆப் ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form