புதுச்சேரி, கள்ளக்குறிச்சி மற்றும் அதனைத் சுற்றி உள்ள அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்க கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் நடமாடும் மருத்துவ வேனை வழங்கியது. தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 நடமாடும் வாகனங்களுடன் சேர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 வாகனங்கள் மூலம் மருத்துவ சேவைகளை கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் தனது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு உணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 6-ந்தேதி இம்பாக்ட் குரு அறக்கட்டளையுடன் இணைந்து முறையே தமிழ்நாட்டில் புதுச்சேரி மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா ஒரு நடமாடும் மருத்துவ வேனை வழங்கி உள்ளது. இந்த வாகனம் மக்களின் வீட்டு வாசலுக்கு சென்று, ஆரம்ப நிலையிலேயே அவர்களுக்கு உள்ள நோயை கண்டறிந்து அதற்கு முறையான மருத்துவ சிகிச்சையை அளித்து மருந்துகளையும் வழங்கும். வரும் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்திற்கு இந்த வேனுக்கான அடிப்படை செலவுகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களையும் கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் வழங்கி உள்ளது.
இது குறித்து கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் பாலசுப்ரமணியன் கூறுகையில், ஒவ்வொரு மக்களுக்கும் அவர்கள் வாழும் இடம் மற்றும் நிதி நிலையை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் ஆகும். எங்கள் இந்த கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு உணர்வு முன் முயற்சி திட்டமானது சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தேசிய சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்துப்போகிறது என்று தெரிவித்தார்.