தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தி ரைஸ் "அறிவுப் பெருஞ்சுடர்" விருது தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது.
தி ரைஸ் அமைப்பு சார்பில் "சங்கம் 5" என்ற பெயரில் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியுடன் கோலகலமாக துவங்கியது. இரண்டாம் நாளில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு மற்றும் பல்வேறு துறை சார்ந்த அமர்வுகள் நடைபெற்றன.
மூன்றாம் நாளில் சர்வதேச மருத்துவ கருத்தரங்கு, உயர் கல்வி கருத்தரங்கு, ஐடி துறைக்கான அமர்வு, பெண் தொழில்முனைவோருக்கான பிரத்யேக அமர்வு உள்ளிட்டவை நடைபெற்றன.
மாலையில் ‘நெக்ஸ்ஜென் எஜுகேஷன் லீடர்ஷிப் அவார்ட்ஸ்’ விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த விருது விழாவிற்கு தி ரைஸ் அமைப்பின் நிறுவனர் அருட் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் தலைமை தாங்கினார். டெக்டன் இன்ஜினியரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். லக்ஷ்மணன், பெக்கி டாட் ஏஐ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் ராதாகிருஷ்ணன், மைக்ரோசாஃப்ட் ஏஐ (யுஎஸ்ஏ) இயக்குநர் செசில் சுந்தர், ஆற்றல் குளோபல் நிறுவனத்தின் தலைவர் இறை மதியழகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அடுத்த தலைமுறை உயர்கல்வி தலைவர்களாக சிறப்பான சேவையாற்றியவர்களாக ஏவிஎஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஏ.வி.செந்தில், ரெங்கநாயகி வார்த்தராஜா பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவர் பிரிந்தா ஜே. ராகவன், ரெங்கநாயகி வார்த்தராஜா பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவர் அஜித் மூர்த்தி, ஸ்கேட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அருண் பாபு, கலசலிங்கம் கல்வி நிறுவன குழுமத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஷாசி ஆனந்த் ஸ்ரீதரன், எம்ஐஇடி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர் எம்.ஒய். அப்துல் ஜலீல், ஐஎஸ்எஸ்எம் பிசினஸ் ஸ்கூல் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பார்கவி மகாலிங்கம், செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.பி.மதன் ஆகியோர் விருது பெற்றனர்.
மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 11 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 8 மணிக்கு கீழடியில் உலகத் தமிழர் ஒற்றுமை பொங்கல் சிறப்பாக கொண்டாடப் படவுள்ளது. கீழடி வரலாற்றில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்த பாரம்பரிய விழாவில் 250க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளில் 55 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் பொங்கல் வைக்கவுள்ளனர்.