சிவங்கை மாவட்டம் கீழடியில் உலகத் தமிழர் ஒற்றுமைப் பொங்கல் கொண்டாட்டத்துடன் தி ரைஸ் சங்கம் 5 உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு நிறைவு பெற்றது. கடந்த 3 நாட்களாக மதுரையில் நடைபெற்று வரும் தி ரைஸ் - சங்கம் 5 மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 55 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான தமிழ் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். தொழில் முனைவோர் பயனடையும் வகையில் பல்வேறு தலைப்புகளில் பிரத்யேக அமர்வுகள் நடைபெற்றன. சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது
மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 11 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9மணிக்கு கீழடியில் உலகத் தமிழர் ஒற்றுமை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கீழடி வரலாற்றில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்த பாரம்பரிய விழாவில் 250க்கும்மேற்பட்ட பொங்கல் பானைகளில் 55 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பொங்கல் கொண்டாட்டத்தின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை உலகத் தமிழ் தொழில் முனைவோர்கள் விளையாடி மகிழ்ந்தனர். பல்வேறு விதமான போட்டிகள் சுவாரசியமாக நடத்தப்பட்டன. கீழடி ஒற்றுமைப்பொங்கல் கொண்டாட்டத்துடன் தி ரைஸ் சங்கம் 5 உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு நிறைவு பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலபிரஜாபதி அடிகளார், திருவடிக்குடில்சுவாமிகள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் பி.ஏ.காஜா முயினுத்தீன் பாகவி, மதுரைப் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து, சிவகங்கை ஆயர் லூர்து ஆனந்தம்,தென்னிந்திய திருச்சபை மதுரை - ராமநாதபுரம் மணடல ஆயர் ஜெயசிங் பிரின்ஸ்பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.