சிவபெருமானை பல்வேறு மொழிகளில் துதித்த ரேகா ராஜூ, மார்க்கண்டேயன், கண்ணப்பர், ராவணன் ருத்ர வீணை மற்றும் சிவனின் 3வது கண் எப்படி உலகம் முழுவதையும் சாம்பலாக்கியது என்ற கதைகளை வழங்கினார். ரேகா ராஜி கலாமண்டலம் டாக்டர். சுகந்தியின் மூத்த சீடர் ஆவார். மேலும், கலையில் அவரின் ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்காக மத்திய சங்கீத நாடக அகாடமி இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் விருதை சமீபத்தில் பெற்றுள்ளார்.
நாட்டியாஞ்சலி பற்றி டாக்டர் ரேகா ராஜு பேசுகையில், “நாட்டியஞ்சலி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல மேடைகளில் நடனமாடிய ஒரே மோகினாட்டம் நாட்டியக் கலைஞர் நான் என்று பெருமையுடன் சொல்ல முடியும். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க பெரிய கோவில்களுக்கு நான் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
மோகினியாட்டம் குறித்து பேசிய அவர் கூறுகையில், பரதத்தைப் போல மோகினியாட்டமும் ஒரு நல்ல கலை. இரண்டிலுமே நிறைய பாரம்பரியம் உள்ளது. மோகினி ஆட்டத்தில் அடவுகள் அனைத்தும் வட்ட வடிவில் இருக்க வேண்டும். கவனம் சிதறாமல் ஆடினால் மட்டுமே மோகினியாட்டம் சிறப்பானதாக இருக்கும். மோகினியாட்டம் இன்னும் பிரபலமாகவில்லை. இதுவரை 2000க்கும் மேற்பட்ட மேடைகளில் நான் மோகினியாட்டம் ஆடியிருக்கிறேன். என்னைப் போல் இன்னும் பல கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில் பெங்களூருவில் நிருத்யதாமா டெம்பிள் ஆஃப் ஆர்ட்ஸ் எனும் நடனப் பள்ளியை நடத்தி வருகிறேன். இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டிலிருந்து 300 மாணவர்கள் பயின்று வருகிறார்கள் என்றார்”.
அவர் மேலும் பேசுகையில், “நான் பல மாணவர்களுக்கு குருவாக இருந்துள்ளேன் - நடனம் மட்டுமல்ல, என்னிடம் வாழ்க்கையைப் படித்த மாணவர்களும் உள்ளனர். எனது இளம் வயது வாழ்க்கை எனக்கு அக்கறையாக இருப்பது, பகிர்ந்துகொள்வது மற்றும் நல்ல மனிதனாக இருப்பதற்கான பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அதையே நான் என் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். இதன் மூலம் அடுத்த தலைமுறை சிறந்த முறையில் வாழ வேண்டும்” என்றார்.