மதுரையின் செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு, ‘டிஜிட்ஆல் சங்கமம் 2026 – மதுரை மாநாடு’ நாளை (அக்டோபர் 10-ஆம் தேதி சனிக்கிழமை) மதுரையில் நடைபெறுகிறது. ‘புதுமைப்படுத்து – மாற்றத்தை உருவாக்கு – பரிணமி’ என்ற மையக்கருத்தில் நடைபெறும் இம்மாநாடு, மதுரையின் செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளுக்கான முக்கிய மாநாடாக அமைகிறது.
மதுரை கோர்ட்யார்டு பை மாரியட் ஹோட்டலில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு, இலக்கமுறை மாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தொழில்முனைவு மற்றும் புதுமையான தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து பல்வேறு சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளன.
மாநாட்டில் 6-க்கும் மேற்பட்ட சிறப்பு அமர்வுகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட முன்னணி பேச்சாளர்களின் உரைகள் இடம்பெற உள்ளன. மேலும், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களை கௌரவிக்கும் வகையில் 26 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இம்மாநாட்டில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் எரிசக்தி வளங்கள் (மின்சாரம்) மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு முன்னாள் இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான சிவராஜா ராமநாதன், பிளாக் ஷிப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
மேலும், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிசன், தொழில்முனைவோர் கோகுலநாதன் பொன்னுசாமி, சங்கீதா அபிஷேக், ஹரி விகாஷ், வினோத் செந்தில், செந்தில் குமார், நிதின் ராஜ், ஏ.ஜே. முகமது ரஃபி, ஏ.கே. மோகன், அப்துல் வஹாப், எல். ராமநாதன், செந்தில் நாயகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையில் உருவாகி வரும் புதிய வாய்ப்புகள், தொழில்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, இலக்கமுறை மாற்றம், இணையப் பாதுகாப்பு, தொடக்க நிறுவனங்களின் வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து மாநாட்டில் கருத்துகளும் அனுபவங்களும் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளன.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் அங்கமான டிஜிட்ஆல் அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த மாநாடு, மதுரையை செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முக்கிய மையமாக உருவாக்குவதற்கான தொழில்துறை மற்றும் தொழில்நுட்பக் கலந்துரையாடல்களுக்கு ஒரு முக்கிய தளமாக அமையும் என்று டிஜிட்ஆல் தலைவர் ஜே.கே.முத்து தெரிவித்துள்ளார்.
