ஏழை, எளிய குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் கனவுகளுக்கு சிறகுகள் அளிக்கும் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் வானமே எல்லை” திட்டம் மூலம் குழந்தைகள் தினத்தில் சிறகடித்த கனவுகள்!


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின்ட்ராப்ஸ் சாரிட்டி ஃபவுண்டேஷன்  சார்பில் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் தனித்துவமான சமூக முன்னெடுப்பான “வானமே எல்லை” திட்டம் சிறப்பாக நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம், முதன்முறையாக விமானத்தில் பயணிக்கும் மகிழ்ச்சியை 35 ஏழை, எளிய குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் வகையில், சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு சிறப்புப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முன்னெடுப்பு ஆனந்தம் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பயணத்தில் பல்வேறு சமூகப் பின்னணியைச் சேர்ந்த பயனாளிகள் பங்கேற்றனர். ஆனந்தம் கல்வி மையம், ஆனந்தம் சிறப்புப் பள்ளி, சேவாலயா, மாற்றம் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் ரெயின்ட்ராப்ஸ் “Educate A Child” கல்வி உதவித்திட்டத்தின் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர்கள், ரெயின்ட்ராப்ஸ் அன்பகம் இல்லத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள் ஆகியோர் இப்பயணத்தில் பங்கேற்றனர். மேலும், உள்ளடக்கிய சமூகத்தின் அடையாளமாக பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர் ஒருவரும், திருநங்கை பயனாளி ஒருவரும் இப்பயணத்தில் இணைந்தனர். கனவுகளுக்கும் வாய்ப்புகளுக்கும் எவ்வித எல்லைகளும் இல்லை என்ற நம்பிக்கையை இம்முயற்சி மீண்டும் வலியுறுத்தியது.

இசையமைப்பாளர் மற்றும் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதர் ஏ.ஆர். ரைஹானா, ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அரவிந்த் ஜெயபால், விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.பி. சந்தோசம் மற்றும் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் பயனாளிகளுடன் இணைந்து இப்பயணத்தில் பங்கேற்றனர். 

சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கான விமானப் பயணம் குழந்தைகளின் உற்சாகத்துடனும், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுடனும் அமைந்தது. திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, கல்லணை அணையைப் பார்வையிட்ட குழுவினர், பின்னர் உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் அரண்மனைக்குச் சென்றனர். அங்கு சோழர்களின் பிரம்மாண்டமான கட்டிடக்கலை மற்றும் தமிழர்களின் பாரம்பரியப் பெருமையை நேரில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பயனாளிகளுக்குக் கிடைத்தது. அதே இரவு திருச்சியிலிருந்து ரயில் மூலம் அனைவரும் சென்னை திரும்புகின்றனர்.

இந்த முன்னெடுப்பு குறித்து ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில்: “வானமே எல்லை என்பது வெறும் விமானப் பயணம் மட்டுமல்ல; ஒவ்வொருவரின் கனவுகளுக்கும் சிறகுகள் அளித்து, வானத்தையும் தாண்டி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் ஒரு முயற்சி. அனைவரையும் உள்ளடக்கிய சமூகமே ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் அடிப்படைக் கொள்கை. ஒருவரின் சூழ்நிலையோ, திறனோ அவர்களின் கனவுகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு தனிமனிதரும் புதிய அனுபவங்களைப் பெறவும், உலகை ஆராயவும், எல்லைகளைக் கடந்து கனவு காணவும் சமமான வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அவர்களின் முகங்களில் காணும் மகிழ்ச்சியும் உற்சாகமும் இந்த முயற்சிக்கு உண்மையான அர்த்தத்தை அளிக்கின்றன.

இந்த ஆண்டின் சென்னை - திருச்சிராப்பள்ளி பயணத்தின் மூலம், தமிழ்நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் உள்ளடக்கிய பயணங்களை ரெயின்ட்ராப்ஸ் வானமே எல்லை திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.”

ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான ஏழை, எளிய குழந்தைகளின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்கி வரும் ரெயின்ட்ராப்ஸ் “வானமே எல்லை” திட்டம், கனவுகள், சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை முன்னிறுத்தி தொடர்ந்து பயணிக்கிறது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form