திருச்சியில் சர்வதேச வர்ம முறை எலும்பு மூட்டு வலி சிகிச்சை மருத்துவமனை திறப்பு


தமிழர்களின் தொன்மையான மருத்துவ அறிவுப் பாரம்பரியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள சித்த மருத்துவம், வர்ம மருத்துவம் மற்றும் சித்த முத்திரைகளின் சிறப்புகளை உலகளாவிய அளவில் எடுத்துச் செல்லும் நோக்கில், திருச்சியில் "டாக்டர் சாலை ஜெய கல்பனா சித்தர் வனம் சர்வதேச வர்ம முறை எலும்பு மூட்டு வலி சிகிச்சை மருத்துவமனை" 2026 அக்டோபர் 27 அன்று திறக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு மருத்துவமனையை, இந்திய அரசின் ஆயுஷ் மற்றும் டி.எஸ்.ஐ அமைப்பின் தலைவர் டாக்டர் சேவக் விஜய் திறந்து வைத்தார். சித்தரவனம் சர்வதேச சித்த மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் நிறுவனர் டாக்டர் சாலை ஜெய கல்பனா முன்னிலை வகித்தார்.

மருத்துவமனையைத் திறந்து வைத்துப் பேசிய ஆயுஷ் இயக்குநர் டாக்டர் சேவக் விஜய், "இது போன்ற ஒரு தனித்துவமான மற்றும் முழுமையான வர்ம மருத்துவப் பல்நோக்கு மருத்துவமனையை நான் காண்பது இதுவே முதல்முறை”. சித்தர் வனம் மருத்துவமனையின் டாக்டர் சாலை ஜெய கல்பனா வர்ம மற்றும் முத்திரைக் கலையை மற்றவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்” என்றார். மேலும், சித்த மருத்துவத்தின் பாரம்பரிய நோய் கணிப்பு முறையான தேரையர் நீர்க்குறி மற்றும் நெய்க்குறி ஆய்வகத்தைத் திறந்து வைத்து, அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்டார்.

சித்த முத்திரை உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சித்தரவனம் சித்த மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சாலை ஜெய கல்பனா பேசுகையில்,  வர்ம மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான வர்ம மூலிகை தைலங்களின் மருத்துவப் பயன்கள் மற்றும் நோய்களுக்கு ஏற்ப அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து  விளக்கினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வர்ம முறையில் மருத்துவம் பார்த்துள்ளோம். சித்த மருத்துவத்தின் அடிப்படைகளான வாதம், பித்தம், கபம், நாடி மற்றும் உடல் தன்மையை ஆராய்ந்து நோயின் மூலக் காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேலும், வர்ம மருத்துவத்தில் அவசர கால சிகிச்சை முறைகள் உள்ளதாகவும், ஆட்டிசம் பாதிப்புள்ள 150 குழந்தைகளுக்குச் சிறப்பு வர்ம மற்றும் முத்திரை சிகிச்சைகள் அளித்து முன்னேற்றம் கண்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வர்மப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ”சுற்றுலாப் பயணிகள் வருகையில் திருச்சி முதலிடத்தில் உள்ளதால், வர்மக்கலை, சித்த மருத்துவம், சித்த முத்திரை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சுற்றுலா சித்தர் வனம் மருத்துவமனையின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்படும் என்றும், கல்லூரிகளில் சுற்றுலா மன்றங்கள் தொடங்கப்பட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், அடுத்த மாதம் 'மை பாரத்' அமைப்பின் 40 மாவட்டப் பொறுப்பாளர்களுக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், வர்மக் கலையைக் கற்றவர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆயுஷ் மையத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், சித்தர் வனம் ஆராய்ச்சி நிறுவனமும் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து, காலப்போக்கில் மறைந்துபோன பழங்கால வர்ம மருந்துச் சூத்திரங்களை மீட்டுருவாக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார். நவீன ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் தரச்சான்றிதழ் பெற்று, தமிழர்களின் வர்ம மருந்துகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்வில் பாரம்பரிய வர்ம செயல்முறைக் கையேடு, பூப்பெய்தல், ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

இறுதியாக நன்றியுரை ஆற்றிய சித்தர்வனம் சித்த மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மருதமலை முருகன், மருத்துவச் சேவை, ஆராய்ச்சி, வர்ம மருந்து மேம்பாடு மற்றும் மூலிகைச் சுற்றுலா  ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படவுள்ள சித்தர் வனம் மருத்துவமனை, தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக உருவெடுத்துள்ளது என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form