கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கோத்ரேஜ் டிஇஐ லேப், ‘இந்தியா இன்க்ளூடட் ஆன் கேம்பஸ்’ வழக்கு ஆய்வு போட்டியின் இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு போட்டி, திருமணம், தாய்மை அல்லது குடும்பப் பராமரிப்புப் பொறுப்புகள் காரணமாக பணியில் இடைவெளி எடுத்த பெண்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கான நடைமுறைத் தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
‘தி மிஸ்ஸிங் ஹாஃப், 2026’ ஆய்வின்படி, இந்தியாவில் கல்வியறிவு பெற்ற பெண்களில் 74% பேர் தங்களது பணிக்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் வேலை இடைவெளியை எதிர்கொண்டுள்ளனர். அனுபவம் வாய்ந்த பெண்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கான முறையான வழிமுறைகள் குறைவாக உள்ள நிலையில், நிறுவனங்கள் ரிட்டர்ன்ஷிப் திட்டங்களை எவ்வாறு சிறப்பாக வடிவமைக்கலாம், பெண்களின் பணித்தொடர்ச்சிக்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பது குறித்து மாணவர்கள் சிந்திக்க இந்தப் போட்டி வாய்ப்பளிக்கிறது.
கோத்ரேஜ் டிஇஐ லேப் தலைவர் பரமேஷ் ஷஹானி கூறுகையில், பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களின் அர்த்தமுள்ள வேலைவாய்ப்புக்குத் தடையாக இருக்கக் கூடாது என்றும், பெண்கள் நம்பிக்கையுடனும் நோக்கத்துடனும் பணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பதிப்பில் ஐஐஎம் திருச்சி வெற்றியாளராகத் தேர்வான நிலையில், இரண்டாவது பதிப்பையும் திருச்சியில் தொடர்வது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறினார்.
2025-ல் தொடங்கப்பட்ட முதல் பதிப்பில் ஐஐஎம் திருச்சி, ஐஐஎம் லக்னோ, ஐஐஎம் மும்பை மற்றும் எச்ஐபிஎம் புனே மாணவர்கள் பங்கேற்றனர். கோத்ரேஜ் அக்ரோவெட்டில் பாலின உள்ளடக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பான வழக்கு ஆய்வில் ஐஐஎம் திருச்சி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், இறுதிப் போட்டியாளர்களுக்கு கோத்ரேஜ் நிறுவனத்தின் மூத்த தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் வழங்கப்படும்.