கலர் அப்பளத்திற்கு தடை: தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் கோரிக்கை


தமிழ்நாடு அரசு, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயற்கை நிறமூட்டிகள் தொடர்பாக மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் க. திருமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006  மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட உணவுக் கலர்களை நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, "கலர் அப்பளம் முழுமையாக தடை" அல்லது "கலர் அப்பளம் சாப்பிடக்கூடாது" என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே உருவாகும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவது சட்டப்படி இயங்கி வரும் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

சட்டப்படி அனுமதிக்கப்பட்ட உணவுக் கலர்களை நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அப்பளங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்பதை அரசு பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதேவேளையில், அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் அல்லது எப்எஸ்எஸ்ஏஐ நிர்ணயித்த அளவை மீறி செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துவோர் மீது மட்டுமே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் மோர் மிளகாய் மற்றும் வத்தல் தயாரிப்புகள் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவல்களால் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், போலியம்மனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல தலைமுறைகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, தரப் பரிசோதனை செய்து தவறு செய்தவர்களை மட்டும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்படி இயங்கி வரும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு செயல்பட வேண்டும். மேலும், "அனுமதிக்கப்பட்ட கலர்" மற்றும் "தடை செய்யப்பட்ட கலர்" ஆகியவற்றின் வித்தியாசத்தை பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்களை பாதுகாக்கும் வகையில் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள், தரநிலை பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை அரசு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"உணவுப் பாதுகாப்பும் அவசியம்; தொழில்களின் பாதுகாப்பும் அவசியம். இரண்டையும் சமநிலையுடன் காக்கும் நடவடிக்கைகளே மக்களுக்கும் தொழிலுக்கும் நன்மை பயக்கும்" என தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் க. திருமுருகன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form