எஸ்.ஓ.எப். சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சென்னை மாணவர்கள் சாதனை

 


நடப்பாண்டிற்கான அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை (எஸ்.ஓ.எப்.) சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் சென்னை மாணவர்கள் சர்வதேச அளவில் முன்னிலைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்தாண்டு நடைபெற்ற தேர்வுகளில் 70 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னையிலிருந்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஹார்ட்ஃபுல்னஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஒமேகா கிளையின் 11ஆம் வகுப்பு மாணவி ஏ. வர்ஷா, சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட் (ஐஇஓ) போட்டியில் சர்வதேச அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். செட்டிநாடு வித்யாஷ்ரமத்தின் 12ஆம் வகுப்பு மாணவர் அஜய் பி. மற்றும் தி பியூபில் சவீதா எக்கோ ஸ்கூலின் 9ஆம் வகுப்பு மாணவர் ஜெய்தேவ் எஸ். ஆகியோர் சர்வதேச கணித ஒலிம்பியாட் (ஐஎம்ஓ) போட்டியில் சர்வதேச அளவில் 2ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். மேலும், மாணவர்கள் சிறந்த செயல்திறனுக்கான சான்றிதழ்கள் மற்றும் சிறப்புத் தகுதிக்கான சான்றிதழ்களையும் பெற்றனர்.

புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 28ஆவது எஸ்.ஓ.எப். சர்வதேச ஆண்டு விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் பங்கேற்று விருதுகளை பெற்றனர். இவ்விழாவில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்.

மேலும், என்ஐடி மணிப்பூரின் முன்னாள் தலைவரும் இஸ்ரோவின் சிறப்புப் பேராசிரியருமான ஒய்.எஸ். ராஜன், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷு குப்தா (ஐஏஎஸ்), மரேங்கோ ஆசியா சர்வதேச நரம்பியல் மற்றும் முதுகெலும்பு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரவீன் குப்தா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குநர் கூறியதாவது: “நடப்பாண்டிற்கான எஸ்.ஓ.எப். ஒலிம்பியாட் தேர்வுகள், மாணவர்களின் விமர்சன சிந்தனை மற்றும் திறனாய்வு ஆற்றலை மேம்படுத்துகின்றன. சென்னை மாணவர்களின் வெற்றி, அவர்களின் விடாமுயற்சியையும் பள்ளிகள் வழங்கிய தரமான கல்வி அடித்தளத்தையும் வெளிப்படுத்துகிறது. மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பாராட்டுகிறோம்” என்றார்.

சென்னையின் கல்விச் சூழல் மாணவர்களை உலகளாவிய போட்டிகளில் பங்கேற்க தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இந்த வெற்றிகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, பிற மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளன.

அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை (எஸ்.ஓ.எப்.) என்பது பள்ளி மாணவர்களிடையே போட்டித் திறன் மற்றும் கல்வி ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் செயல்படும் கல்வி அமைப்பாகும். இவ்வமைப்பு சர்வதேச கணிதம், அறிவியல், கணினி அறிவியல், ஆங்கிலம், பொது அறிவு, சமூக அறிவியல் உள்ளிட்ட பல்வேறு ஒலிம்பியாட் தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகள் மாணவர்களின் கருத்தியல் புரிதல், பகுப்பாய்வுத் திறன் மற்றும் சிக்கல் தீர்க்கும் ஆற்றலை உலகளாவிய அளவில் மதிப்பிடும் தளமாக விளங்குகின்றன.


Post a Comment

Previous Post Next Post

Contact Form