மதுரையில் இன்று (ஜனவரி 8) தி ரைஸ் அமைப்பு நடத்தும் சங்கம் 5 உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு துவங்குகிறது. இம்மாநாட்டினை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைக்கிறார்.
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் 2016ம் ஆண்டு 'தி ரைஸ்' துவங்கப்பட்டது. மதுரையில் முதல் மாநாடு நடந்தது. அதன் பிறகு பல்வேறு நாடுகளில் தி ரைஸ் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, தற்போது 16வது மாநாடாக மீண்டும் மதுரையில் தி ரைஸ் சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது.
‘தி ரைஸ் - சங்கம் 5 : மா மதுரை 2026’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டின் துவக்க விழா நாளை (ஜனவரி 8) மாலை 5 மணிக்கு வேலம்மாள் ஐடாஸ்கட்டர் அரங்கில் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் இடைச்சங்கம் என்று அறியப்படும் இரண்டாம் சங்கத்தை நிறைவு செய்து, மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கி வைத்த மாமன்னர் திருமாறன் அவர்களின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளது. அதே மேடையில் மதுரையில் நான்காம் சங்கம் 1901ம் ஆண்டு நிறுவிய பாண்டித்துரை தேவர் அவர்களுக்கும் மரியாதை செய்யப்படவுள்ளது. விழாவிற்கு தமிழ்நாடு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கி மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். முதன்மை விருந்தினராக ஆ.ராசா எம்.பி., கலந்து கொண்டு தொல்காப்பியரும், திருமூலரும், வள்ளுவரும், வள்ளலாரும், தமிழ் கூறும் பல நூறு புலவர்களும் வகுத்தளித்த வழித்தடத்தில் 21ம் நூற்றாண்டுத் தமிழர் மரபணுவை சீர்மிகச் செதுக்குவோம் என்ற தலைப்பில் பேசுகிறார்.
சிறப்பு விருந்தினர்களாக வேலம்மாள் குழுமங்களின் தலைவர் முத்துராமலிங்கம், தமிழ் எகனாமிக் கவுன்சில் பொதுச் செயலாளர் நமச்சிவாயம், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, தி ரைஸ் யுஏஇ சுப்ரீம் கவுன்சில் தலைவர் சாகுல் ஹமீது மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தி ரைஸ் அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்வின் ஒரு பகுதியாக "அனைத்துலக தமிழூர்" என்ற கனவு திட்டம் வெளியிடப்படுகிறது. இதில் தமிழர் பண்பாடு, மொழி, மருத்துவம், சுற்றுலா மற்றும் பாரம்பரிய வாழ்வியல் ஆகியவை உலகளவில் முன்னெடுக்கப்பட உள்ளன.
முன்னதாக 8 ம்தேதி காலை 8 மணிக்கு அலங்காநல்லூர், டாக்டர் கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கில், உலகத் தமிழர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. சங்கம் 5 மாநாட்டுக் குழு சார்பில் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி துவக்க விழாவிற்கு தமிழ்நாடு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் தலைமை தாங்குகிறார். முதன்மை விருந்தினர்களாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர், திரு, பி. ராஜசேகரன், சு.வெங்கடேசன் எம்.பி., கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியில் தி ரைஸ் குளோபல் அமைப்பின் நிறுவனர் ஃபாதர் ஜெகத் கஸ்பர் ராஜ், தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் தலைவர் ஜெகதீசன், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, தி ரைஸ் அமைப்பின் தென்மண்டல இயக்குனர் பெரிஸ் மகேந்திரவேல், தி ரைஸ், மதுரை தலைவர் பதஞ்சலி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
4 நாட்கள் நடைபெறும் சங்கம் 5 மாநாட்டின் இரண்டாம் நாள் (ஜனவரி 9 ) அன்று விழாவின் சிறப்பம்சமாக "உலகளாவிய தமிழ் ஊடக & தமிழ் தாக்கம் விருதுகள்" வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதன்மை விருந்தினராக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினர்களாக வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர், தலைவர், வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், இயக்குனர், நடிகர் கே.பாக்கியராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர், நடிகர் பொன்வண்ணன், நடிகர் வேல ராமமூர்த்தி, பேச்சாளர் கோபிநாத், நடிகர் கணேஷ்வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
மூன்றாம் நாளில் (ஜனவரி 10) சர்வதேச தமிழ் மருத்துவர்கள் சார்பில் "மருத்துவ முன்னேற்றம் 2026" என்ற தலைப்பில் மருத்துவ கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிப் பேசுகிறார்கள். மேலும், தி ரைஸ் நெக்ஸ்ட் ஜென் கல்வித் தலைவர்கள் விருதுகள் - 2026 நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
பல்வேறு தொழில் வணிக செயல்பாடுகள், கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. முக்கிய அம்சங்களாக வர்த்தக கண்காட்சி, வாங்குபவர் - விற்பனையாளர் நேரடி சந்திப்பு, பிட்ச் பெஸ்ட் (கருத்து முன்வைப்பு நிகழ்வு), தகவல் தொழில்நுட்ப (ஐடி) மாநாடு, மகளிர் மாநாடு, மனிதவள, கல்வி, பொறியியல் & உற்பத்தித் துறை மாநாடுகள், உலகளாவிய தளவாட (லாஜிஸ்டிக்ஸ்) மன்றம், வங்கி அதிகாரிகள், நிதி நிபுணர்கள் & கணக்காய்வாளர்கள் சந்திப்பு போன்றவை இடம்பெறுகின்றன. இதில் 55 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளனர்.
மாநாட்டின் நிறைவு நாளான ஜனவரி 11 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 8 மணிக்கு கீழடியில் உலகத் தமிழர் ஒற்றுமை பொங்கல் சிறப்பாக கொண்டாடப் படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், பாலபிரஜாபதி அடிகளார், திருவடிக்குடில் சுவாமிகள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் பி.ஏ.காஜா முயினுத்தீன் பாகவி, மதுரைப் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து, சிவகங்கை ஆயர் லூர்து ஆனந்தம், தென்னிந்திய திருச்சபை மதுரை - ராமநாதபுரம் மணடல ஆயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
‘தி ரைஸ் - சங்கம் 5 : மா மதுரை 2026’, தமிழர்களின் 70 ஆண்டுகால எதிர்காலப் பயணத்திற்கு வழிகாட்டும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.