உத்யம் வியாபார் அமைப்பு, தனது முன்முயற்சியான ‘இஸ்திரி திட்டம்’ மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள இஸ்திரி தொழிலாளர்கள் செப்டம்பர் 2025 நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடி கூடுதல்வருமானம் ஈட்டியுள்ளனர்.
உத்யம் லேர்னிங் ஃபவுண்டேஷனின் இணை-நிறுவனர் கிருஷ்ணன் ரங்கநாதன் கூறுகையில், "உத்யம் நிறுவனத்தில், நாங்கள் குறுந்தொழில் முனைவோரை இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் முக்கியத் தூண்களாகக் கருதுகிறோம். சரியான ஆதரவு அளிக்கப்படும்போது, அவர்களால் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். ‘இஸ்திரி திட்டம்’ மூலம் ரூ.100 கோடி என்ற மைல்கல்லை எட்டியிருப்பது எங்களுக்கு மட்டுமல்ல, இந்த மாற்றத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான இஸ்திரி தொழிலாளர்களுக்கும் பெருமையான தருணமாகும். உள்ளூர் அளவில் உருவாக்கப்படும் வாழ்வாதாரத் தீர்வுகள், தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஒரே நேரத்தில் வருமானம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதையும் இது நிரூபிக்கிறது" என்றார்.
உத்யம் வியாபாரின் ‘இஸ்திரி திட்ட’த்தின் திட்டத் தலைவர் சிரில் ஜோசப் கூறுகையில்,“இந்த மைல்கல், எங்கள் மீது நம்பிக்கை வைத்து, நிலக்கரியிலிருந்து எல்பிஜி-க்கு மாறி, தங்கள் தொழிலில் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்று புதிய கோணத்தில் சிந்தித்த ஆயிரக்கணக்கான இஸ்திரி தொழிலாளர்களுக்குச் சொந்தமானது. தொழிலாளர்களின் எரிபொருள் செலவைக் குறைத்து, உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும் என்ற ஒரு எளிய நோக்கத்தில்தான் ‘இஸ்திரி திட்டம்’ தொடங்கப்பட்டது. ஆனால் இன்று, இது அவர்களின் வாழ்வாதாரத்திலும் சுற்றுச்சூழலிலும் அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு இயக்கமாக வளர்ந்துள்ளது” என்றார்.
‘இஸ்திரி திட்டம்’, பன்னெடுங்காலமாக இருந்துவரும் இஸ்திரி தொழிலில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தெருவோர இஸ்திரி தொழிலாளர்கள், நிலக்கரியைப் பயன்படுத்தும் இஸ்திரிப் பெட்டிகளிலிருந்து விலகி, மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி எரிவாயு அடிப்படையிலான இஸ்திரிப் பெட்டிகளுக்கு மாற உதவுகிறது.இந்தப் புதுமையான மாற்றத்தின் மூலம், இஸ்திரி தொழிலாளர்கள் தங்களது எரிபொருள் செலவை பாதியாகக் குறைப்பதுடன், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வரை தங்களது உற்பத்தித்திறனையும் அதிகரிக்க முடிகிறது.இதன்மூலம், அவர்கள் அதிக வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்து, கூடுதல் வருமானம் ஈட்ட முடிகிறது.
நிலக்கரியிலிருந்து எல்பிஜி-க்கு மாறுவது, தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்த உதவுவதோடு, தொழிலாளர்களின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. கடந்த 4 ஆண்டுகளில், உத்யம் வியாபார் தனது ‘இஸ்திரி திட்டத்தை’ 1 நகரத்திலிருந்து 5 நகரங்களுக்கு விரிவுபடுத்தி, 8,000-க்கும் மேற்பட்ட இஸ்திரி தொழிலாளர்கள் எல்பிஜி இஸ்திரிப் பெட்டிகளுக்கு மாற உதவியுள்ளது. இந்த முன்முயற்சியின் ஆதரவைப் பெற்ற இஸ்திரி தொழிலாளர்களின் வருமானம் சராசரியாக 25% உயர்ந்துள்ளது.அத்துடன், ஆண்டுக்கு 6,000 டன்களுக்கும் அதிகமான கரியமில வாயு வெளியேற்றமும் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ.100 கோடி மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, இஸ்திரி தொழிலாளர்களை மேம்படுத்துவதில் உத்யம் வியாபார் புதிய உத்வேகம் கொண்டுள்ளது.அடுத்த பத்தாண்டுகளில், ‘நிலக்கரி இஸ்திரிப் பெட்டிகள் இல்லாத இந்தியாவை’ உருவாக்குவதை உத்யம் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு அமைப்புகள் மற்றும் அரசாங்கம் என ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளிகள் அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறது.