இந்தியாவின் மிகப்பெரிய சோலார் பேனல் ஃப்ரேம் உற்பத்தி ஆலை குஜராத்தில் திறப்பு



குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட எச் & எச் அலுமினியம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட அலுமினிய சோலார் பிரேம் உற்பத்தி ஆலையைத் தொடங்கியுள்ளது. ராஜ்கோட்டில் உள்ள சிப்தா கிராமத்தில் ஆண்டுக்கு 24,000 மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்த ஆலை, இந்தியாவில் 6 ஜிகாவாட் வரை சூரிய மின்சக்தி நிறுவலை ஆதரிக்க முடியும்.

இந்த ஆலையை ஜூலை 4, 2025 அன்று இந்திய அரசின் மாண்புமிகு மத்திய ஜல் சக்தி அமைச்சர்  சி.ஆர். பாட்டீல் திறந்து வைத்தார். இதில் மூத்த அரசு அதிகாரிகள், எச்&எச் அலுமினியத்தின் தலைமைக் குழு மற்றும் அழைக்கப்பட்ட அனைத்து பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

28,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன மற்றும் மிகவும் மேம்பட்ட சோலார் பேனல் அலுமினிய பிரேம்களுக்கான ஆலையில் நிறுவனம் சுமார் ரூ.150 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த ஆலையில் சோதனை உற்பத்தி ஜூன் 2025 மாதத்தில் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் வணிக உற்பத்தி ஒரு மாதத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு திறனில் இந்த ஆலை ஆண்டுக்கு ரூ. 700 முதல் ரூ.750 கோடி விற்பனையை ஆதரிக்க முடியும். இந்த ஆலை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

புதிய ஆலை குறித்து எச்&எச் அலுமினியம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் உத்தம் படேல் கூறுகையில், “இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட சோலார் பேனல் அலுமினிய பிரேம் ஆலை ஆகும். மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அவர்களின் ஆதரவிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். தற்போது, இந்தியா 90 முதல் 95 சதவிகிதம் அலுமினிய சோலார் பேனல் பிரேம்களை இறக்குமதி செய்கிறது, இந்த ஆலை மூலம், மேக் இன் இந்தியா முயற்சியை ஆதரிப்பதற்கும் சூரிய ஆற்றல் துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் ஒரு அர்த்தமுள்ள படியை நாங்கள் எடுத்து வருகிறோம். அடுத்த ஒரு மாதத்திற்குள் வணிக உற்பத்தியைத் தொடங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

விஜய் கனேரியா, இயக்குனர், எச் & எச் அலுமினியம் பிரைவேட் லிமிடெட் கூறும்போது, “இந்தியா 2025ஆம் ஆண்டில் 100 ஜிகாவாட் சோலார் மின்சக்தி திறனை எட்டியிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை. இதற்கு மேலாக, 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை நிறுவுவதற்கான துணிவான இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. இதில் சுமார் 280 ஜிகாவாட் மின்சக்தி சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்குள் மிகப்பெரிய வாய்ப்பு உருவாகிறது” என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form