இந்தியாவின் முன்னணி சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், அடிப்படை மருத்துவ சேவைகளை மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில், திருப்பூரில் தனது புதிய முயற்சியான டாக் கேந்திராயை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டி. கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., மற்றும் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் எம்.கே.எம்.ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, சமூக நலனை முன்னிலைப்படுத்தும் இந்த முயற்சியை பாராட்டினர். அவர்கள் தெரிவித்ததாவது, “இந்த முயற்சி, நகர்மயமாகாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்க வழிவகுக்கும். சுகாதாரத்துறை தேவைகளுக்கு ஒரு நவீன தீர்வாக இது அமையும்,” என்றனர்.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பாலாஜி பாபு கூறியதாவது, “டாக் கேந்திரா மூலம், நாங்கள் சுகாதார சேவைகளை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்ற விரும்புகிறோம். எங்கள் நெட்வொர்க்கை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான பராமரிப்பை வழங்குவதோடு, ஆரம்ப பராமரிப்பு மட்டுமே அல்லாமல், மேம்பட்ட மருத்துவ உதவிக்காகவும் ஒரு வழிகாட்டி ஆக இருக்கிறோம். சமூகத்தின் நல்வாழ்வில் பங்களிப்பதே எங்கள் இலக்கு,” என்றார்.
டாக் கேந்திரா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்டார் ஹெல்த் கிளைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மருத்துவர் மற்றும் பயிற்சி பெற்ற துணை மருத்துவருடன் ஆலோசனை சேவைகளை வழங்குகின்றன. பொதுமக்களுக்கு ஆரம்ப பராமரிப்பு, நோயறிதல் மற்றும் டெலிமெடிசின் மூலமாக நிபுணரின் ஆலோசனைகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக வழங்கப்படும்.
மக்களின் உடல்நலக் கவலைகளை தீர்த்து, தேவையான பராமரிப்புக்கான வழிகாட்டுதலை வழங்கும் இந்த முயற்சி, சுகாதார சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தும் முக்கியமான படியாக திகழ்கிறது.