மதுரையில் எச்.டி.எப்சி வங்கி சார்பில் நிதி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான வங்கிப் பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நாட்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் முயற்சியாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான வங்கி நடைமுறைகளை விளக்கவும், எச்.டி.எப்சி வங்கி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மதுரையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை ஐயர் பங்களா மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாரம்பரிய கலைகளான தெருக்கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நிதி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எளிதாக புரியச் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மதுரை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதர்சனா மற்றும் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு, சைபர் குற்றங்களில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம், பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனை செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதைக் குறிப்பாக விளக்கினர். மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் புகாரளிக்கலாம் என தெரிவித்தனர்.
இதில் ஜே.எம்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன இயக்குநர் லயன்.வி.ஜெகநாதன், எச்.டி.எப்சி வங்கி மண்டலத் தலைவர் சண்முக வேலாயுதம், கிளஸ்டர் ஹெட் அழகுதுரை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை திருப்பாலை கிளை மேலாளர் ஸ்வர்ணா செந்தில்நாதன் தொடங்கி வைத்து, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஏராளமான பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.