சிம்பையோசிஸ் நேஷனல் ஆப்டிட்யூட் டெஸ்ட் 2024 மூலம் சிம்பையோசிஸ் எம்பிஏ படிப்புகளுக்கான சேர்க்கைப் பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்த நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 5, 2024 அன்று முதல் விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. பதிவுச் செயல்முறை, தகுதித் தேவைகள் மற்றும் பிற முக்கிய விவரங்கள் பற்றிய விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ எஸ்என்எபி இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் பார்வையிட வேண்டும். முதலில் பதிவுசெய்யும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு நடைபெறும் நகரமும் தேதியும் ஒதுக்கப்படும்.
2024ஆம் ஆண்டிற்கான, சிபிடி எனப்படும் கணினி அடிப்படையிலான எஸ்என்எபி தேர்வானது டிசம்பர் 8, 2024, டிசம்பர் 15, 2024 மற்றும் டிசம்பர் 21, 2024 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய எஸ்என்எபி 2024 இன் தேர்வு முடிவுகளின் அறிவிப்பு ஜனவரி 8, 2025 அன்று வெளியாகும். வரவிருக்கும் இந்தத் தேர்வானது, சிம்பையோசிஸ் இன்டர்நேஷனல் நிகர்நிலை பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 17 நிறுவனங்களில் உள்ள 27 படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பப் படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியா முழுவதும் உள்ள 80 நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும், மேலும் விண்ணப்பதாரர்கள் மூன்று முறை இந்தத் தேர்வை எழுதுவதற்கு முயற்சி செய்யலாம். "மூன்றில் சிறந்த மதிப்பெண்" என்ற அணுகுமுறையைப் பின்பற்றி, இந்த மூன்று முயற்சிகளில் அவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு முயற்சிக்கும் பதிவுக் கட்டணமாக ரூ.2250 செலுத்த வேண்டும். மேலும் கூடுதல் படிப்புகளுக்கு விண்ணப்பத்தில் ஒரு படிப்பிற்கு ரூ. 1000 என்ற கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
சிம்பையோஸிஸ் நேஷனல் ஆப்டிட்யூட் டெஸ்ட் என்ற தேர்வுக்குத் தகுதிபெற விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில், குறைந்தபட்சம் 50 சதவித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டில் பயிலும் இளங்கலை மாணவர்களும், தங்கள் இறுதித் தேர்வுகளில் எஸ்என்எபி தேர்விற்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இருந்து தகுதி பெற விரும்புவோர், இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் மூலம் கல்வித் தகுதிக்கு இணையானச் சான்றிதழைப் பெற வேண்டும்.
எஸ்என்எபி தேர்வானது சிம்பையோசிஸ் இன்டர்நேஷனல் நிகர்நிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள பல புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனங்களுக்கான நுழைவாயிலாகச் செயல்படுகிறது, இது பரந்த அளவிலான எம்பிஏ படிப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. எஸ்என்எபி 2024 பற்றிய கூடுதல் தகவலைத் தெரிந்துகொள்ளவும் உங்கள் பதிவுச் செயல்முறையைத் தொடங்கவும் <https://www.snaptest.org/> இணையதளத்தைப் பார்வையிடவும்.
சிம்பையோசிஸ் இன்டர்நேஷனல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ராமகிருஷ்ணன் ரமணன் கூறுகையில், "சிம்பையோசிஸ் நேஷனல் ஆப்டிட்யூட் டெஸ்ட் எங்கள் நிறுவனங்களுக்கு ஒரு நுழைவாயிலாக செயல்படுகிறது, இது விதிவிலக்கான கற்றல் அனுபவங்களை வழங்குவதோடு நிர்வாகத்தில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு உறுதியளிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சிறந்து விளங்குவதற்கான பயணத்தை எங்களுடன் தொடங்கும்படிக் கேட்டு ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்றார்.