நரம்புகளில் ஏற்படும் வலி என்பது உடனடியாக ஏற்படக்கூடிய ஒன்றல்ல. இது நரம்பு மண்டலத்தில் நீண்ட காலமாக பாதிப்பு இருந்தால் மட்டுமே ஏற்படக்கூடிய வலியாகும். கடுமையான காயம், பக்கவாதம் அல்லது முதுகுத்தண்டு சேதம் போன்ற பிரச்சினைகளால் நரம்பியல் வலி ஏற்படும். இது ஒருவரின் அன்றாட வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கிறது. எனவே, நரம்பியல் வலியைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சையை புரிந்துகொள்வது அவசியம் ஆகும். நரம்பியல் வலிக்கு சிகிச்சை அளிப்பது சவாலான ஒன்று மற்றும் அது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கலாம், ஏனெனில் நரம்புகள் சேதமடைந்து அல்லது செயலிழந்து விடுகின்றன.
நரம்பியல் வலிக்கான சிகிச்சையைப் பொறுத்தவரை, வலி எங்கு ஏற்படுகிறது மற்றும் அதன் தன்மை குறித்து மருத்துவர்கள் முதலில் பரிசோதிக்கின்றனர். அவர்கள் "த்ரீ எல் அப்ரோச்" என்று அழைக்கப்படும் ஒரு முறையைப் பயன்படுத்துகின்றனர், இதில் நோயாளியிடம் வலி எப்படி இருக்கிறது என்பது குறித்து "கேட்பது", உடலில் ஏற்பட்டுள்ள அறிகுறிகளை "பார்த்தல்" மற்றும் வலி ஏற்பட்டுள்ள பகுதியை "கண்டறிதல்" ஆகியவை அடங்கும். இந்த முறை வலியின் சரியான தன்மையைக் கண்டறிய உதவுகிறது.
அதாவது கடுமையான வலி, எரிச்சல், மின்சார அதிர்ச்சி போன்ற உணர்வுகள், இடைவிடாத வலி அல்லது இடம்பெயரும் வலி போன்றவை குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது. இதற்கு நோயாளியை நன்கு பரிசோதிப்பது மிகவும் அவசியம் ஆகும். சிகிச்சைக்கு முன், மருத்துவர்கள் நோயாளியின் மருத்துவ நிலை மற்றும் பிற நோய்களை ஆராய்கின்றனர். வலிக்கு துல்லியமான சிகிச்சை அளிப்பதற்கு முன் இது எதனால் ஏற்பட்டது என்பதை கண்டறிந்தால் மட்டுமே அதற்கு சரியான சிகிச்சை அளிக்க முடியும்.
நரம்பியல் வலியைக் குறைப்பதற்காக கபாபென்டின் மற்றும் ப்ரீகாபலின் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பலன் கிடைக்காவிட்டால் மாற்று வழியை தேட வேண்டும். இந்த மருந்துகள் ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப செயல்படுவதால் அவருக்கு ஏற்ற சரியான மருந்தை தேர்வு செய்வதற்கு சிறிது காலம் ஆகலாம். சில நேரங்களில், வலியை திறம்பட நிர்வகிக்க மருத்துவர்கள் மருந்துகளின் கூட்டு கலவையைப் பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து ஏபிசி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அலீம் கூறுகையில், நரம்பியல் வலியை சரியான மருத்துவ ஆலோசனைப்படி குணப்படுத்தலாம். கூடுதலாக, மசாஜ் சிகிச்சை மற்றும் குத்தூசி சிகிச்சை போன்ற சிகிச்சைகள் நரம்பியல் வலிக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும். நீங்கள் நரம்பியல் வலியால் பாதிக்கப்பட்டிருந்தால், நோய் அறிதல் மற்றும் சிகிச்சைக்கு ஒரு மருத்துவ நிபுணரை அணுகுவது நல்லது என்று தெரிவித்தார்.