மதுரையில் உள்ள முன்னணி சர்வதேச மேல்நிலை பள்ளியும், குளோபல் ஸ்கூல்ஸ் குழுமத்தின் அங்கமுமான விகாசா வேர்ல்ட் ஸ்கூல்,பல்வேறு பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான வினாடி வினா போட்டியை இரண்டாவது முறையாக நடத்தியது. மதுரையில் வெற்றிகரமாக நடைபெற்ற இந்த வினாடி வினா போட்டியில் 36 பள்ளிகளைச் சேர்ந்த 948 மாணவ-மாணவியர், ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் போட்டியிட்டனர். வினாடி வினா மாஸ்டர் பெர்டி ஆஷ்லி, பங்கேற்பாளர்களை வரவேற்று நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார்.
ஜூனியர் பிரிவில் 7 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளும், சீனியர் பிரிவில் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர். அறிவியல், வரலாறு, புவியியல், இலக்கியம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் போட்டியாளர்களின் அறிவாற்றலை சோதிக்கும் வகையில் கேள்விகள் தொகுக்கப்பட்டிருந்தன.
இந்த வினாடி வினா சுற்றுகள் பல்வேறு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆரம்பமாக ஜூனியர் பிரிவிற்கு முதல் சுற்றும், பின்னர் சீனியர் பிரிலிம்ஸ் இரண்டாவது சுற்றாகவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற தீவிர வினாடி வினா போட்டிகளையடுத்து, இறுதி சுற்றுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டன. திருநெல்வேலியின் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியின் அணிகள் - ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்று கோப்பைகளை கைப்பற்றின. மேலும், ஜூனியர் பிரிவில் - விகாசா வேர்ல்டு பள்ளி மற்றும் லட்சுமி பள்ளி ஆகியவற்றை சேர்ந்த அணிகளும்; சீனியர் பிரிவில் - மகாத்மா பிபிசி மற்றும் மகாத்மா குளோபல் கேட்வே ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த அணிகளும் இரண்டாம் இடத்தைப் பிடித்தன.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராஜ்மஹால் சில்க்ஸின் இயக்குனர், சிவபிரியா ராஜ விநாயக் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார். இரண்டாமிடம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. தங்களது அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கிய பிற அணிகளுக்கும் பிரத்தியேகப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விகாசா வேர்ல்ட் ஸ்கூலின் தலைமை ஆசிரியை வினோலா தாமஸ் இந்நிகழ்வின் வெற்றி குறித்து உற்சாகமாக பேசுகையில், ”விஸ்குவிஸ் 2.0 போட்டியை நடத்துவது குறித்தும், பெர்டி ஆஷ்லி எங்கள் வினாடி வினா போட்டிகளின் மாஸ்டராகப் பெற்றது குறித்தும் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இந்த போட்டிக்காக தங்களை முனைப்புடன் தயார் செய்து கொண்டு, சிறப்பாக பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவியர் குறித்து எங்களுக்கு பெருமையாக உள்ளது. மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை வெளிப்படுத்த இதுபோன்ற தளங்களைத் தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் திண்ணமாக உள்ளோம்” என்றார்.
விகாசா வேர்ல்ட் பள்ளியின் முதல்வர் முரளி என் பி இந்நிகழ்ச்சி குறித்து பேசுகையில், “பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவ-மாணவியரை இங்கு ஒரே இடத்தில் பார்ப்பது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதில் பங்கேற்ற அனைவரும் மிகுந்த ஆர்வத்தையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு பங்கேற்பாளர்களின் அறிவுக்கு சவால் விடுப்பதாக மட்டுமல்லாமல், மறக்க முடியாத பல நல்ல தருணங்களையும் உருவாக்கித் தந்தது குறிப்பிடத்தக்கது” என்றார்.