யெஸ் வேர்ல்டு கிளைமெட் டெக் அமைப்பு பருவ நிலை மாற்றம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘பூமியை காப்போம்’ என்னும் பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை டெல்லியில் நடத்தியது. புதுடெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘பூமியை காப்போம்’ திட்டத்தின் சமூக ஆர்வலர் சந்தீப் சவுத்ரி மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள இந்த அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புவி வெப்பமடைதல் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அதில் இந்த பிரமாண்ட திட்டம் கவனம் செலுத்த உள்ளது.
இந்த பிரமாண்ட பூமியை காப்போம் திட்டத்தை பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டு புவி வெப்பமயமாதல் பிரச்சினையில் இருந்து பூமியைக் காப்பாற்றுவதற்கான சரியான நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள்.
இது குறித்து பேசிய யெஸ் வேர்ல்டு இணை நிறுவனர் அமித் திவாரி கூறுகையில், எங்களின் பூமியை காப்போம் திட்டமானது பருவ நிலை மாற்றத்திற்கு மேலும் முக்கியத்துவம் அளித்துள்ளது. இது தொடர்பாக சமூகத்துடன் இணைந்திருப்பது ஒரு சிறந்த தருணம் என்றும், புவி வெப்பமயமாதலின் தாக்கங்கள் மற்றும் அது மனித குலத்திற்கு எவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் அவர் பேசினார். இந்த திட்டம் மக்களுக்கு புவி வெப்பமயமாதல் குறித்து சரியான தகவல்களை வழங்குவதோடு, நிலைத்தன்மையை நோக்கி சரியான பருவ நிலை நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்களை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வரும் காலங்களில் நாங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.