மெஹுல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 6 மாதக் குழந்தை, பெருந்தமனிகளின் இடமாற்றம், இதயக் கீழறைகளைப் பிரிக்கும் சுவர்க் குறைபாடு, நுரையீரல் வாய்க் குறுக்கம், உள்ளிட்ட பிறவி இதயக் கோளாறுகளின் அரிய சேர்க்கையுடன் பிறந்தது.இதயக் கோளாறுகளில் இது மிக மிக அரிய சேர்க்கையாகும். இந்தச் சிக்கலான நிலை காரணமாக, 6 மாதக் குழந்தையான மெஹூல் 3.5 கிலோவுக்கும் குறைவான எடையில் இருந்தான். அவனது பிராணவாயு 40-45 சதவிகித அளவுகளை மட்டுமே கொண்டிருந்ததால், ஆரோக்கியமாகத் தோன்றவில்லை.
கணவன் இல்லாத சூழலில் ஒற்றைப் பெற்றோராக மெஹுல் அம்மா சிக்கலான அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணத்தைத் திரட்டக் கடுமையாகப் போராடினாள். பிறவி இதயக் கோளாறுகளுடன் பிறக்கும் வசதி வாய்ப்பற்ற ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் அரசு சாரா அமைப்பான ஜெனெசிஸ் ஃபௌண்டேஷன் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொள்ள முன் வந்தது. கோவை ஜி குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் (ஜிகேஎன்எம்) அக்குழந்தைக்கு வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெருந்தமனிகளின் இடமாற்றத்தின் போது, இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரு முக்கிய தமனிகள், அதாவது, பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமனி, ஆகியவை தங்கள் வழக்கமான இடங்களிலிருந்து மாறுகின்றன. இதன் காரணமாக, பிராணவாயு குறைந்த நீல இரத்தம் நுரையீரலுக்குப் பதிலாக உடலுக்குள் செலுத்தப்படுகிறது. பிராணவாயு நிறைந்த சிகப்பு இரத்தம் உடலுக்குச் செல்வதற்குப் பதிலாக மீண்டும் நுரையீரலுக்கே திரும்புகிறது. இதன் காரணமாக உடல் சீரான நல்ல பிராணவாயு அளவுகளைப் பெறாமல் போகும் சூழல் உருவாகிறது. மேற்கூறிய கோளாறுடன், மெஹூலுக்கு இதயத்தின் 2 கீழறைகளில் ஓட்டை இருந்ததால், பிராணவாயு நிறைந்த மற்றும் பிராணவாயு குறைந்த இரத்தங்கள் கலக்கத் தொடங்கின. மேலும் குழந்தையின் நுரையீரல் தடுக்கிதழ் மிகவும் குறுகலாகவும் இருந்தது.
இந்நோயைக் குணப்படுத்தும் வழக்கமான சிகிச்சை முறை ‘ராஸ்டெல்லி’ ஆகும். ஆனால் கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை குழந்தை நலம் & பிறவி இதயக் கோளாறு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜயகுமார் ராஜு, குழந்தைக்கு நுரையீரல் வாய்க் குறுக்கம் இருப்பதையும் அறிந்திருந்தார். ‘ராஸ்டெல்லி’ அறுவை சிகிச்சை முறை உடனடி நிவாரணம் அளித்தாலும், அக்குழந்தைக்கு வாழ்நாளில் மேலும் பல அறுவை சிகிச்சைகள் பின்னாளில் தேவைப்படும். எனவே அவர் ‘ஆர்இவி ‘அறுவை சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்தார்.
இது குறித்து ஜெஜெசிஸ் ஃபௌண்டேஷன் செயல் இயக்குனர் சிம்ரன் சாகர் கூறுகையில் ‘தீவிர இதயக் கோளாறுடன் பிறக்கும் எந்தக் குழந்தையும் சிகிச்சைக்குப் பணம் இல்லாத ஒரே காரணத்துக்காக இறக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தத் தொடர்ந்து உழைக்கிறோம். குடும்பம் எங்கே வாழ்ந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும், சிறப்பான சிகிச்சைக்கான அணுக்கம் ஒவ்வொரு குழந்தைக்கும் வேண்டும். சிகிச்சைக்கான செலவை எங்கள் நிறுவனத்தின் நன்கொடை அமைப்பான அத்யன் ஃபவுண்டேஷன் வழங்கும்’ என்றார்.
இது குறித்து டாக்டர் விஜயகுமார் ராஜு பேசுகையில் ‘குழந்தைக்கு ஏற்பட்ட கோளாறுகளின் சேர்க்கை கடுமையாக இருந்ததால், சிக்கலான அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. குழந்தையின் பிராணவாயு செறிவு அளவுகள் மிக மிகக் குறைந்து காணப்பட்டதால், உடல் எடையும் கணிசமாகக் குறைந்தது. கடவுள் அருளால், சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. குழந்தையின் பிராணவாயு அளவுகள் இப்போது 100 எட்டப், படிப்படியாகக் குணமடைந்து வருகிறான்’ என்றார்.