டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் , இத்தாலியின் மிசானோ அட்ரியாடிகோ பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மிசானோ வேர்ல்ட் சர்க்யூட்டில், 2026-ம் ஆண்டிற்கான 'டிவிஎஸ் ரேசிங் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்' முதன்முறையாக ஐரோப்பிய மண்ணில் பிரம்மாண்டமாக அரங்கேறியுள்ளது. அக்டோபர் 2 முதல் 4 வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இத்தாலி ரேஸ் சுற்றானது, டிவிஎஸ் நிறுவனத்தின் சர்வதேசப் பயணத்தில் ஒரு அட்டகாசமான அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
உலகளவில் அதிவேக பைக் கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்ற ஐரோப்பிய மண்ணில், டிவிஎஸ் நிறுவனத்தின் நிபுணத்துவமிக்க ரேசிங் பாரம்பரியம், மேம்பட்ட என்ஜினீயரிங் தொழில்நுட்பம் மற்றும் அபாரமான செயல்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் உலக பைக் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த இத்தாலி ரேஸில், உலகின் 4 கண்டங்கள் மற்றும் 12 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த 14 ரேஸர்கள் களமிறங்கினர். பந்தயத்திற்கென்றே பிரத்தியேகமான ரேசிங் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட ‘டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310’பைக்க்குகளில் கலந்து கொண்டது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா என 4 முக்கிய நாடுகளில், 5 அனல் பறக்கும் சுற்றுகளுடன் ஆசியக் கண்டத்தில் கவனத்தை ஈர்த்து வந்த இந்த TRIC பந்தயம், தற்போது இத்தாலியிலும் தனது பந்தயச் செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது. இதன்மூலம், ஐரோப்பிய மண்ணிலும் தனது பந்தய எல்லையை வெற்றிகரமாக விரிவுபடுத்தி, உலகெங்கிலும் உள்ள ரேஸர்களை ஒரே தளத்தில் நேருக்கு நேர் மோத வைத்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிசினஸ் பிரிவின் தலைமை நிர்வாகி விமல் சும்ப்ளி உற்சாகத்தோடு பேசுகையில், “டிவிஎஸ் ரேசிங் சர்வதேச சாம்பியன்ஷிப் ஐரோப்பிய மண்ணில் அடியெடுத்து வைத்திருப்பது, எங்களது உலகளாவிய பந்தயப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். இந்திய மண்ணில் உருவான ஒரு சாம்பியன்ஷிப் பந்தயத்தை கம்பீரமாக ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றிருப்பது, நமது டிவிஎஸ்-ன் அபாரமான பந்தயப் பாரம்பரியத்திற்கும், அதிநவீன பொறியியல் தொழில்நுட்பத்திற்கும் கிடைத்த மகத்தான அங்கீகாரம். இந்தியாவிலிருந்து உலகிற்கு எங்கள் ரேசிங் நிபுணத்துவத்தைக் கொண்டு சேர்க்கும் 'ட்ராக் டூ ரோட்' தத்துவத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு இருக்க முடியாது!” என்றார்
“டூ வீல்ஸ் மோட்டார் ரேசிங் அமைப்பின் பிரமோஷன்ஸ் டைரக்டர் ரான் ஹாக் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்ட போது, “TRIC பந்தயம் இப்போது ஐரோப்பாவிலும் சீறிப்பாயத் தொடங்கியிருப்பது இந்தத் தொடருக்கே ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கியுள்ளது. டிவிஎஸ் ரேசிங்குடன் நாங்கள் கைகோர்த்ததன் நோக்கமே, வீரர்களுக்கு மறக்க முடியாத ரேசிங் அனுபவங்களைத் தருவதும், இத்தொடரைப் புதிய நாடுகளுக்குக் கொண்டு சென்று போட்டியின் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை உருவாக்குவதுதான். இத்தாலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மிசானோ ட்ராக்கில் ரைடர்களும் அவர்களது குழுவும் பெற்ற இந்த அனல் பறக்கும் அனுபவம், அவர்களின் எதிர்கால ரேஸ்களுக்கும் எஃப்ஐஎம் ஆசிய ரோட் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கும் மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!” என்றார்
இத்தாலிய மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பின் ஸ்போர்ட்டிங் டைரக்டர் சிமோன் போல்கோரி உற்சாகத்தோடு பேசுகையில், “டிவிஎஸ் ரேசிங் சர்வதேச சாம்பியன்ஷிப்பை எங்கள் இத்தாலி மண்ணிற்கு வரவேற்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய மண்ணில் வேரூன்றிய ஒரு சர்வதேச ரேசிங் தொடர், ஐரோப்பாவிலேயே முதன்முறையாக எங்கள் மிசானோ ட்ராக்கில் அடியெடுத்து வைப்பதைப் பார்க்கும்போது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. இந்த சர்வதேச ட்ராக்கின் அனல் பறக்கும் வேகமும், வீரர்களின் அசாத்திய துடிப்பும் இந்த ரேஸை எந்த அளவுக்குக் கொண்டாட்டமாக மாற்றப் போகிறது என்பதைப் பார்க்க நாங்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்!” என்றார்.
டிவிஎஸ் மோட்டார்ஸின் உலகளாவிய விஸ்வரூப வளர்ச்சியின் ஒரு தூணாகவே இந்த டிவிஎஸ் ரேசிங்கின் சர்வதேசப் பாய்ச்சல் அமைந்திருக்கிறது. ஒருபக்கம் TRIC பந்தயம் அடுத்தடுத்து புது நாடுகளுக்குத் தனது எல்லையை விரித்துக்கொண்டே செல்ல, மறுபக்கம் உலகளவில் 70 லட்சத்திற்கும் அதிகமான பைக் பிரியர்களின் மனங்களைக் கொள்ளையடித்து சாதனை படைத்து வருகிறது ‘டிவிஎஸ் அப்பாச்சி’ சீரிஸ். இதற்கு மகுடம் வைத்தாற்போல், சாகசத்தையும் பைக் ரைடிங்கையும் உயிராக நேசிக்கும் 5 லட்சத்திற்கும் அதிகமான ரைடர்களைக் கொண்ட ‘டிவிஎஸ் அப்பாச்சி ஓனர்ஸ் குரூப்’ இந்த பைக் பிரியர்களின் உலகத்தை மேலும் பேரன்புடன் வாரி அணைத்துள்ளது. அந்த அபாரமான வேகத்திற்கு மேலும் உற்சாகமூட்டும் விதமாக, பைக் பந்தயங்களின் தாயகமாகக் கருதப்படும் ஐரோப்பாவின் முக்கிய மோட்டார்ஸ்போர்ட் மையத்திற்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பெருமைமிகு ரேசிங் பாரம்பரியத்தை இந்த இத்தாலி சுற்று மிகக் கம்பீரமாகக் கொண்டு சேர்த்துள்ளது.
2023-ம் ஆண்டு தாய்லாந்தின் சாங் சர்வதேச சர்க்யூட் ட்ராக்கில், மணிக்கு 215.9 கி.மீ வேகத்தில் மின்னலெனப் பாய்ந்து, 1:49:74 வினாடிகளில் ஒரு சுற்றை முடித்து புதிய சாதனை படைத்தது 'டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310'. அதோடு நின்றுவிடாமல், 2024-ல் அதே ட்ராக்கில் மணிக்கு 216 கி.மீ வேகம், 1:48:44 லேப் டைமிங் எனத் தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மலேசியாவின் மிரட்டலான செபாங் இன்டர்நேஷனல் ட்ராக்கில் 2:20:80 நிமிடங்களில் சுழன்றடித்து உலக பைக் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் மேம்பட்ட ஏரோடைனமிக்ஸ் , கூடுதல் குதிரைத்திறன் கொண்ட அசாத்திய செயல்திறன், அச்சு அசலாக வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு ஏற்ற துல்லியமான பேலன்ஸ் என அத்தனை ரேசிங் வித்தைகளும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன! கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரேசிங் ப்ரியர்களின் இதயத்துடிப்பாக விளங்கும் டிவிஎஸ் பிராண்டின் அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் அபாரமான செயல்திறனின் உச்சமாக இந்த பைக் திகழ்கிறது.
ட்ராக்கில் அனல் தெறிக்கும் பந்தயத்தை நிகழ்த்தி காட்டிய உலகளாவிய ரேசிங் குழு!
இந்த சீசனில் நடைபெற்ற இத்தாலி சுற்றானது, உலகின் 4 கண்டங்கள் மற்றும் 12 நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த 14 ரேஸர்கள் ஒரே ட்ராக்கில் நேருக்கு நேர் மோதவிட்டு, டிவிஎஸ் ரேசிங் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்பிற்கு ஒரு புதுவிதமான சர்வதேச த்ரில்லை அளித்துள்ளது.
