செயற்கை நுண்ணறிவு என்ப்படும் ஏஐ தொடர்பான மாநாட்டை மதுரையில் நடத்திய டிஜிட் ஆல் அமைப்பை அமைச்சர் நிர்மல்குமார் பாராட்டினார். ஏஐ மாநாடு மதுரைக்கே பெருமை சேர்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
‘புதுமைப்படுத்து – மாற்றத்தை உருவாக்கு – பரிணமி’ என்ற மையக்கருத்தில் மதுரையில் டிஜிட் ஆல் சங்கமம் 2026 மாநாடு நடைபெற்றது. இம்மாநாடானது, தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் ஒன்றிணைந்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் முக்கிய தளமாக அமைந்தது. முழு நாள் நிகழ்வாக நடந்த இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தொழில்முனைவு மற்றும் புதுமையான தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து பல்வேறு சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன. ஆறு-க்கும் மேற்பட்ட சிறப்பு அமர்வுகளில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி பேச்சாளர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். தொழில்நுட்ப வளர்ச்சியில் உருவாகி வரும் புதிய வாய்ப்புகள், வணிகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பங்கு மற்றும் எதிர்காலத் தொழில்முனைவுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் 26 விருதுகள் வழங்கப்பட்டன.
இம்மாநாட்டில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது மதுரை போன்ற நகரத்தில் டிஜிட்டல் அறிவாற்றலை வளர்க்கும் டிஜிட்ஆல் அமைப்பு ஏஐ குறித்து ஒரு மாநாடை நடத்தியிருப்பது பாராட்டுக்குறியது. டிஜிட்டல் வளர்ச்சி என்பது உடனுக்குடன் நடப்பதாகும். டிஜிட்டல் நுட்பங்களை அனைவரும் அறிந்து கொள்வது அவசியமாகும், என்றார்.
முன்னதாக மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோபிசன் மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு முன்னாள் இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான சிவராஜா ராமநாதன், பிளாக் ஷிப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் உள்பட பல்வேறு முக்கிய விருந்தினர்கள் பங்கேற்று டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் ஏஐ குறித்து பேசினார்கள்.
தொழில்முனைவோர் கோகுலநாதன் பொன்னுசாமி, சங்கீதா அபிஷேக், ஹரி விகாஷ், வினோத் செந்தில், செந்தில் குமார், நிதின் ராஜ், ஏ.ஜே. முகமது ரஃபி, ஏ.கே. மோகன், அப்துல் வஹாப், எல். ராமநாதன், செந்தில் நாயகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்களது துறை சார்ந்த டிஜிட்டல் முன்னெடுப்புகளையும், அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும் விவரித்தனர்.
இந்த மாநாடு குறித்து டிஜிட்ஆல் தலைவர் ஜே.கே.முத்து கூறுகையில், டிஜிட்ஆல் சங்கமம் 2026 மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. பல்வேறு முக்கிய விருந்தினர்கள் பங்கேற்று டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்டம் குறித்து பேசினார்கள். தொழில்நுட்பத் துறையின் தற்போதைய போக்குகள், டிஜிட்டல் மாற்றத்தின் அவசியம் மற்றும் எதிர்கால வணிக வாய்ப்புகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல்கள் நடந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஒரே தளத்தில் சந்தித்துப் புதிய தொடர்புகளை உருவாக்கவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் இம்மாநாடு வாய்ப்பளித்தது, என்றார்.
