இந்தியாவின் சுயாதீன செயற்கை நுண்ணறிவு கிளவுட் சேவை வழங்குநரான பாரத்கிளவுட், வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான இபென்டோஸ் உடன் இணைந்து, எதிர்கால பிராண்ட் மார்க்கெட்டிங் முயற்சிகள் மற்றும் நிகழ்வு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான கூட்டணியை அறிவித்துள்ளது.
இக்கூட்டணி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற 7-வது இந்தியா-கனடா வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-கனடா வர்த்தக உச்சி மாநாட்டில், இரு நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முறைப்படுத்தப்பட்டது. இபென்டோஸின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளத்தைப் பயன்படுத்தி, தனது பிராண்ட் மார்க்கெட்டிங், நிகழ்வு தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டை வலுப்படுத்துவதில் பாரத்கிளவுட்டின் உறுதிப்பாட்டை இந்தக் கூட்டணி வெளிப்படுத்துகிறது.
பாரத்கிளவுட், இபென்டோஸின் ஹைப் எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மார்க்கெட்டிங் தளத்தையும் பயன்படுத்தி, தனது பிராண்டுக்கு ஏற்ற மார்க்கெட்டிங் பிரச்சாரங்களை திறம்படவும், அதிக அளவிலும் உருவாக்கி நிர்வகிக்க உள்ளது. அதேசமயம், இதே செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிராண்ட் மார்க்கெட்டிங் திறன்களை தனது வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதற்கான வாய்ப்புகளையும் ஆராய உள்ளது.இந்த ஒருங்கிணைப்பு, செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் நிகழ்வு அனுபவங்களை கூட்டாக செயல்படுத்துவதற்கான பல்வேறு வாய்ப்புகளையும் உருவாக்கும். இதன் மூலம் பார்வையாளர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதுடன், நிகழ்வு மேலாண்மையையும் மேலும் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
பாரத்கிளவுட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் டக்கல்லபள்ளி கூறுகையில்*, “பாரத்கிளவுட் பல்வேறு சந்தைகளில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில், எங்களது மார்க்கெட்டிங் பிரச்சாரங்கள், நிகழ்வுகள் மற்றும் டிஜிட்டல் ஈடுபாடுகளில் அதிக புத்திசாலித்தனமான மற்றும் ஊடாடும் அனுபவங்களை வழங்கக்கூடிய ஒரு தொழில்நுட்பக் கூட்டாளி எங்களுக்குத் தேவைப்படுகிறது. எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு மேலும் சிறப்பான டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்தக் கூட்டாண்மையை நாங்கள் பார்க்கிறோம்”* என்றார்.
இபென்டோஸ் இன்க். நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஎம்ஓ ஜஸ்பிந்தர் பாட்டியா கூறுகையில், “இந்திய நிறுவனங்களுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் துறையில் இபென்டோஸ் நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு உள்ள பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், எங்களது புதிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த மார்க்கெட்டிங் தளமான இபென்டோஸ் ஹைப்-ன் திறன்களையும் இணைப்பதன் மூலம், பாரத்கிளவுட் பிராண்டை மேலும் வலுப்படுத்தவும், அதன் வாடிக்கையாளர்களுக்கு புத்திசாலித்தனமான, அளவிடக்கூடிய மற்றும் பிராண்டுக்கு ஏற்ற மார்க்கெட்டிங் தீர்வுகளை வழங்கவும் சிறப்பான வாய்ப்பை காண்கிறோம்” என்றார்
இபென்டோஸ் நிறுவனம், தனது நிகழ்வு தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3,000-க்கும் அதிகமான நிகழ்வுகளை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த அனுபவத்தின் அடிப்படையில், நிறுவனங்கள் தங்களது பிராண்டுக்கு ஏற்ற மார்க்கெட்டிங் பிரச்சாரங்களை அதிக அளவில் திறம்பட உருவாக்கி நிர்வகிக்க உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மார்க்கெட்டிங் தளமான இபென்டோஸ் HYPE-ஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டாண்மையின் மூலம், பாதுகாப்பான மற்றும் நிறுவனத் தரத்திலான கிளவுட் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, இந்தத் திறன்களை மேலும் மேம்படுத்த இரு நிறுவனங்களும் இலக்கு கொண்டுள்ளன.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பைத் தாண்டி, இந்தக் கூட்டணி இந்தியா மற்றும் கனடா இடையேயான எல்லை தாண்டிய புதுமை மற்றும் டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான வளர்ந்து வரும் வாய்ப்புகளையும் பிரதிபலிக்கிறது. இந்தியா மற்றும் கனடாவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் புதுமை சார்ந்த சூழலமைப்புகளை இணைக்கும் வகையில், நிறுவனங்களுக்கான நிகழ்வு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிராண்ட் மார்க்கெட்டிங், AI பயன்பாடு, மெய்நிகர் அனுபவங்கள் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தொழில்நுட்பத் திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு முயற்சிகளை ஆராய இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.
