சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் லிமிடெட் நிறுவனம், விவசாயப் பயன்பாட்டிற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட புதிய 'வி4' ரக 4-அங்குல சப்மெர்சிபிள் பம்புகள் மூலம் சப்மெர்சிபிள் பம்ப் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. ஒரு முன்னோட்ட முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஆரம்பக்கட்டமாகத் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் முதற்கட்டமாக, ஆகஸ்ட் 2026-ல் திருநெல்வேலியில் இதன் விற்பனை துவங்குகிறது.
இந்த புதிய முயற்சி குறித்து சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.வி. மகேஷ் பேசுகையில், "சப்மெர்சிபிள் பம்ப் துறையில் நாங்கள் களமிறங்குவது, வாட்டர் பம்ப் தயாரிப்பில் எங்களுக்கு ஏற்கனவே உள்ள ஆழ்ந்த அனுபவத்தின் ஒரு இயல்பான தொடர்ச்சியாகும். எங்களது உயர்தர பொறியியல் திறன்களைக் கொண்டு கிராமப்புற இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நல்லதொரு வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது. இந்த முன்னோட்ட முயற்சி மூலம், விவசாய வாடிக்கையாளர்களின் தேவைகளை நேரில் புரிந்துகொண்டு, நம்பகத்தன்மை, சிறந்த பொறியியல் தரம் மற்றும் தகுந்த சேவை ஆதரவு கொண்ட தயாரிப்புகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கமாகும்," என்றார்.