சென்னையில் சமீபத்தில் தனது 5ஜி சேவையைத் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான விஐ, தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் 5ஜி சேவைகளைத் தொடங்கி தனது விரிவாக்கப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
தொழிற்துறை மையங்கள், அதிக டேட்டா பயன்பாடு உள்ள இடங்கள் மற்றும் வளர்ந்து வரும் நகரப் பகுதிகள் போன்ற முக்கியச் சந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து விஐ நிறுவனம் தனது 5ஜி சேவைகளை மிக துரிதமாக விரிவாக்கம் செய்து வருகிறது. 'கிழக்கின் பிரெஞ்சு ரிவியரா' என்று அழைக்கப்படும் புதுச்சேரி, ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக மட்டுமின்றி, கல்வி மற்றும் வணிகத்திற்கான வளர்ந்து வரும் மையமாகவும் திகழ்கிறது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என இரு தரப்பிலிருந்தும் டேட்டாவிற்கான தேவை இங்கு அதிகமாக உள்ளது.
விஐ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், அதிவேக டேட்டா சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்து, புதுச்சேரியின் கனெக்டிவிட்டியை மேம்படுத்துவதை வி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் வணிக மையங்களில் தடையற்ற மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 5ஜி சேவையின் தொடக்கம் குறித்து விஐ நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தின் பிசினஸ் ஹெட் சாய் வெங்கடராமன் கூறுகையில், "முக்கியச் சந்தைகளில் எங்களது செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, வி நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் விரிவாக்கத்தை நாங்கள் வேகப்படுத்தியுள்ளோம். சென்னையில் 5ஜி சேவை அறிமுகமானதைத் தொடர்ந்து, புதுச்சேரியின் தொடங்கப்பட்டிருக்கும் இச்சேவை எங்களது பயணத்தில் ஒரு முக்கியப் படியாகும். அதிக டேட்டா பயன்பாடு உள்ள இடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சுற்றுலா மற்றும் வணிக மையங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளோம். இது எங்களது வாடிக்கையாளர்களுக்குச் சீரான மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் அனுபவத்தை உறுதி செய்யும்." என்றார்.