இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனமாக முன்னணி வகிக்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, முத்திரைப் பதித்து வரும் தனது முதன்மை மோட்டார் சைக்கிள் திருவிழாவான - டிவிஎஸ் மோட்டோசோலின் ஐந்தாவது பதிப்பை கோவாவில் நடத்துகிறது. இந்நிகழ்வில் சிலிர்க்க வைக்கும் இருசக்கர வாகன அனுபவத்தைக் கொண்டாடுவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 8,000-க்கும் மேற்பட்ட ரைடர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். இந்த உற்சாகமான மோட்டார் சைக்கிள் திருவிழா, புதிய மோட்டார் சைக்கிள்கள், விருப்பத்தேர்வுகள் அடிப்படையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கலாச்சாரத்தின் ஆரவாரமான அனுபவங்களை வெளிப்படுத்தும் மாபெரும் நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.
மோட்டோசோல் நிகழ்வின் ஐந்தாவது ஆண்டில், உலகம் முழுவதிலும் உள்ள இருசக்கர வாகன ஆர்வலர்களிடமிருந்து கிடைத்து வரும் ஏகோபித்த வரவேற்பும், அவர்களது பங்களிப்பும் இந்நிகழ்வை இருசக்கர வாகனத் தொழில்துறையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வாகன நிகழ்வுகளில் ஒன்றாக அதன் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டின் முக்கிய சிறப்பம்சங்களில் டிவிஎஸ் ரோனின் அகோண்டாவின் அறிமுகம், டிவிஎஸ் அப்பாச்சி வாகன வரிசையின் வெற்றிகரமான இருபது ஆண்டு பயணத்தைக் குறிக்கும் வகையில் டிவிஎஸ் அப்பாச்சியின் ஆர்டிஎக்ஸ் ஆண்டு விழா பதிப்பு, ஸ்மோக்ட் கேரேஜ் உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இரண்டு கஸ்டம் மாஸ்டர்பீஸ்களான டிவிஎஸ் ரோனின் கென்சாய் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்பீட்லைன் ஆகியவற்றின் காட்சிப்படுத்துதல் மற்றும் மோட்டோசோல் பார்வையாளர்களுக்கான பிரத்தியேகமான ’ஆர்ட் ஆஃப் ப்ரொடக்?ஷன்’ வரையறுக்கப்பட்ட பதிப்பு ஹெல்மெட் போன்றவை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.
மோட்டோசோலின் 5-வது பதிப்பைத் தொடங்கி வைத்து, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தலைவர் சுதர்ஷன் வேணு கூறுகையில், “டிவிஎஸ் மோட்டோசோல் என்பது தனித்துவம், தனிப்பயன்களை முன்னெடுக்கும் கலாச்சாரம் மற்றும் இளைய தலைமுறையின் வெளிப்பாட்டைக் குறிக்கும் ஒரு மாபெரும் விழாவாகும். இது மோட்டார் சைக்கிளிங் மீது நமக்கு இருக்கும் பொதுவான ஆர்வத்தை கொண்டாடுகிறது. இந்த ஆண்டு மோட்டோசோல் மிகவும் விசேஷமானது, ஏனெனில் இது டிவிஎஸ் அப்பாச்சியின் வெற்றிகரமான 20-வது ஆண்டு கொண்டாட்டத்துடன் இணையும் வகையில் நடைபெறுகிறது” என்றார்.
