உலகின் முன்னணி இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார், தனது வாடிக்கையாளர்களுக்காக நாடு தழுவிய சிறப்பு சேவை முகாம் ஒன்றை அறிவித்துள்ளது. புதிய ஆண்டை உங்கள் வாகனத்தின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தொடங்க வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். இந்திய அளவில் 'உறுதி ஏற்போம், புத்துயிர் அளிப்போம், பயணம் செய்வோம்' என்ற கருப்பொருளுடன் இந்த பிரச்சாரத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சிறப்பு சேவை முகாம், டிசம்பர் 20, 2025 முதல் ஜனவரி 05, 2026 வரை இந்தியா முழுவதும் உள்ள டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் நடைபெறவுள்ளது.
வாகனத்தை முறையாகப் பராமரிப்பதன் மூலம் அதன் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் வாகனம் ஓட்டும் செளகரியம் மேம்படும் என்பதை டிவிஎஸ் மோட்டார் வாகன உரிமையாளர்களிடையே இந்த முகாம் வலியுறுத்துகிறது. வாகனங்களை விற்பனை செய்வதோடு தங்களது பணி முடிந்துவிட்டது என்றில்லாமல், விற்பனைக்குப் பிறகும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இது காட்டுகிறது.
இந்த சிறப்பு சேவை முகாமில் பங்கேற்கும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தின் இன்ஜின், பிரேக், எலக்ட்ரிக்கல் பாகங்கள் மற்றும் சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றை பரிசோதித்து கொள்ளும் வகையில் ஒரு முழுமையான வாகனப் பரிசோதனையைப் பெறமுடியும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டிவிஎஸ் வாடிக்கையாளர்களும் இதில் பங்கேற்கலாம். தங்களது வாகனத்திற்கான சேவையை முன்பதிவு செய்ய, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், க்யூஆர் குறியீடு அல்லது டிவிஎஸ் கனெக்ட் செயலியைப் பயன்படுத்தலாம், என்று டிவிஎஸ் மோட்டார் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
