ஹைதரபாத்தில் எம்எஸ்டிஇ ஏற்பாடு செய்த ‘கௌஷல் மந்தன்’ மண்டல பயிலரங்கம்

 



ஹைதராபாத்தில் காணா ஷாந்திவனத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் (எம்எஸ்டிஇ) ஏற்பாடு செய்த ‘கௌஷல் மந்தன்’ மண்டல பயிலரங்கில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான சுயாட்சி பொறுப்பாளராகிய மாநில அமைச்சர் ஜெயந்த் சௌதாரி உரையாற்றினார். திறன் மேம்பாட்டில் கடுமையான, அனைவருக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் அணுகுமுறையிலிருந்து விலக வேண்டிய தேவை இருப்பதை அவர் வலியுறுத்தினார். “திறன் மேம்பாட்டிற்கு கட்டுப்பட்ட வார்ப்புகள் இருக்கக்கூடாது. மாநிலங்கள் தங்களது உள்ளூர் பொருளாதார சூழலைக் கொண்டு தீர்வுகளை உருவாக்கும் வகையில் வலுப்படுத்தப்பட வேண்டும். இளைஞர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். அதனால்தான் நாங்கள் நம்பத்தகுந்த மாற்றங்களை உருவாக்க முடியும்”  என அவர் கூறினார்.

மாறுபாடுகளை ஏற்கக்கூடிய மற்றும் தன்னிச்சையான திறன் மேம்பாட்டு சூழலை உருவாக்கும் நோக்கத்தை வலியுறுத்திய அமைச்சர், நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள ஐந்து சிறப்பு மையங்களில், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் அமைக்கப்படும் இரண்டு புதிய சிறப்புத் திறன் மேம்பாட்டு மையங்களை அறிவித்தார். இந்த மையங்கள், தரமான பயிற்றுநர் பயிற்சி மற்றும் வளர்ந்துவரும் துறைகளுக்கு ஏற்ப சிறப்பு செலுத்தப்பட்ட திறன்களை உருவாக்குவதற்கான தேசிய அளவிலான முன்மாதிரிப் புள்ளிகளாக செயல்படவுள்ளன.

மாநிலங்கள் திறன் மேம்பாட்டை மிகவும் துல்லியமான, விளைவுகளை மையமாகக் கொண்ட திட்டமிட்ட அணுகுமுறையில் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை, அமைச்சர் ஜெயந்த் சௌதாரி வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை, இந்திய இளைஞர்களின் கனவுகள் மற்றும் நாட்டின் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் பொருளாதாரத் தேவைகளுடன் நெருக்கமாக பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தரமான பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனில், அதை வழங்கும் பயிற்றுநர்களின் தரமே அடிப்படையாக இருக்கிறது என்பதை உணர்த்திய அமைச்சர், பயிற்றுநர் மேம்பாட்டு முயற்சிகளில் நேர்த்தியான முதலீடுகள் செய்ய மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார். இதில், நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்துவது, போட்டித் தன்மையுள்ள ஊதியங்கள் வழங்குவது மற்றும் கடுமையான கற்பித்தல் தரநிலைகளை நிலைநிறுத்துவது ஆகியவை அடங்கும். மேலும், உள்ளூர் திறன் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்க, மாவட்ட கலெக்டர்கள் உடன் இணைந்து செயல்படும் வகையில் மாநிலங்கள் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரவலாக்கப்பட்ட திட்டமிடல்  கட்டமைப்பை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும், உலக வங்கி போன்ற நிபுணர்கள் நடத்தும் நுண்மையான திறன் பற்றாக்குறை மதிப்பீடுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form