ரோபாட்டிக்ஸ் பள்ளியை துவக்க ஏபிபி ரோபாட்டிக்ஸ் மற்றும் நியூ ஏஜ் மேக்கர்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்னும் நம்டெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆட்டோமேஷனில் உள்ள கல்வி இடைவெளியை குறைக்கவும், ரோபோட்டிக்ஸ் திறன்களை வளர்க்கவும், இந்தியாவில் தொழில்துறை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரோபோடிக்ஸ் துறையில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கு குறிப்பாக ரோபோடிக்ஸ் இன்ஜினியர்கள், ரோபோ டிசைன் இன்ஜினியர்கள், அப்ளிகேஷன் இன்ஜினியர்கள் மற்றும் ஸ்மார்ட் பேக்டரி டிசைனர்கள்* போன்ற பதவிகளுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் ஏபிபி ரோபாட்டிக்ஸ் மற்றும் நம்டெக் ஸ்கூல் ஆப் ரோபாட்டிக்ஸ் ஆகியவை சர்வதேச கல்வி அடிப்படையில் ஒரு மேம்பட்ட பாடத்திட்டத்தை உருவாக்க உள்ளன. இதன் விளைவாக, கைத்தொழில் சார்ந்த திட்டங்களும் உருவாகும். இந்த மையத்தில் சிறந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வசதிகள் இருக்கும், மேலும் பள்ளி அதன் புதிய வளாகத்திற்கு மாறும்போது இவை விரிவுபடுத்தப்படும்.
இது குறித்து ஏபிபி இந்தியாவின் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பிரிவு தலைவர் சுப்ரதா கர்மாகர் கூறுகையில், எங்களின் இந்த புதிய ஒப்பந்தம் மூலம் ஆட்டோமேஷன் துறையில் நமது மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இருக்கிறோம். ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷனில் எங்களின் நிபுணத்துவத்துடன் நம்டெக்கின் புதுமையான கல்வி அணுகுமுறையை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவின் உற்பத்தித் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியை நாங்கள் ஆதரிப்போம் என்றார்
நம்டெக் இயக்குனர் ஜெனரல் அருண்குமார் பிள்ளை கூறுகையில், ஏபிபி ரோபாட்டிக்ஸ் உடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது எங்கள் கூட்டு முயற்சியின் முதல் படியாகும். இந்த முன்னோடி முயற்சியானது, தொழில்துறையுடன் இணைந்த கல்வி மற்றும் உற்பத்தித் துறையை நவீனமாக மாற்றுவதற்கும் ஒரு சிறந்த முயற்சியாகும். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவைப் பொறுத்தவரை ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும் இங்கு ரோபோடிக்ஸ் பொறியியலில் திறமையானவர்களின் பற்றாக்குறையும் உள்ளது. இது உலக அளவில் போட்டித் திறன் கொண்ட திறமைமிக்கவர்களை உருவாக்கவும் உதவும் என்றார்.