அரசுப்பள்ளி மாணவிகளின் நலன் காக்கும் முயற்சியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் களமிறங்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையாக பராமரிப்பின்றி இருந்த கழிவறையை வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை ஸ்பிரிண்ட்6 நிறுவனத்துடன் இணைந்து சீர் செய்யும் பணியை சமீபத்தில் தொடங்கியது. பயன்படுத்த இயலாத நிலையில் இருந்த கழிவறைகள் வாய்ஸ் ஆப் தென்காசியின் முயற்சியால் சீர்படுத்தப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், முறையான சுகாதார வசதிகள் இல்லாததால் 60% பெண் குழந்தைகள் மாதவிடாய் காரணமான பள்ளியைத் தவறவிடுகின்றனர் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது மிகவும் வேதனைக்குரியது.
உலக சுகாதார நிறுவன ஆய்வில், 40% மாணவர்கள் பள்ளி கழிவறைகளை பயன்படுத்த பயப்படுவதால் ஒரு நாளைக்கு ஒரு லிட்டருக்கும் குறைவாக குடிநீர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தண்ணீர் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவேதான் நாங்கள் கழிவறைகளை சீர்படுத்தும் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளோம்.
அதேப்போல, கடந்த 2019ம் ஆண்டு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் அரசுப்பள்ளிகள் குறித்த ஒரு ஆய்வு முடிவை அறிவித்தது. அதில் 80 சதவீதம் அரசுப் பள்ளி கழிவறைகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. தென்காசி மாவட்ட அரசுப்பள்ளிகளில் உள்ள கழிவறைகளைச் சீர்படுத்தும் முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக 1000 கழிவறைகள் சீரமைக்கப்பட உள்ளது. அதற்கான தொடக்கம்தான் இன்றைய விழா. மாணவர்கள் எல்லோரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும், என்றார்.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக கல்வியாளர் மருதையா, வழக்கறிஞர் மைதின் பாரூக், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், தலைமை ஆசிரியை நஜ்முன்னிசா, ஸ்பிரிண்ட்6 நிறுவனர் காளி சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கழிவறை சீர்படுத்தும் முன்னெடுப்பில் அனைவரும் பங்கெடுக்கலாம். நீங்கள் உதவுதால் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மேலுன் மாணவர்களின் வருகை மற்றும் செயல்திறனை அதிகரிக்கச் செய்யவும், பெண் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் விகிதத்தை குறைக்கவும் இந்த முன்னெடுப்பு உதவும் என்று வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.