நடப்பாண்டுக்கான எஸ்ஓஎஃப் ஒலிம்பியாட் தேர்வில் மதுரையைச் சேர்ந்த 3 மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். நடப்பாண்டு ஒலிம்பியாட் தேர்வில் மதுரையைச் சேர்ந்த 19,129 மாணவர்களின் பங்கேற்றனர். அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை நடப்புக் கல்வியாண்டிற்கான தேர்வு வெற்றியாளர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களை கௌரவிக்கும் வகையில், விருது வழங்கும் விழாவை தில்லியில் நடத்தியது.
விருது வழங்கும் விழாவில் கெளரவ விருந்தினராக விக்ரம் சாராபாய் நிறுவன விஞ்ஞானி பேராசிரியர் ஒய்.எஸ்.ராஜன், இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செயலாளர் சிஎஸ் ஆஷிஷ் மோகன், எபியன்ஸ் சாப்ட்வேர் நிறுவன இ ஓஆர். ரவி, முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சேத்தன் பகத் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட 3,500 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மதுரை வேலம்மாள் போதி பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் வருண் ஆதித்யா எஸ் ஐ, மண்டல அளவில் அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் முதல் ரேங்க் பெற்று, மண்டல அளவில் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்றிதழும் பெற்றுள்ளார். குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர் நித்திலன் எம், மண்டல அளவில் அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் 3வது ரேங்க் பெற்று, மண்டல அளவில் வெண்கலப் பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழைப் பெற்றார். டி.வி.எஸ் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஹேமந்த் எஸ், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 3வது ரேங்க் பெற்று, மண்டல அளவில் வெண்கலப் பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழைப் பெற்றார்.
அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை நிறுவனர் இயக்குனர் மஹாபீர் சிங், பேசுகையில், "ஒலிம்பியாட் தேர்வுகளை ஏற்பாடு செய்து 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த கல்வியாண்டில், தேர்வுகளில் 70 நாடுகளில் இருந்து 91,000 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர் என்றார்.