ஆண்டுதோறும் மே 27-ந்தேதி தேசிய சூரிய ஒளி பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேசிய சூரிய ஒளி பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியான தேசிய சூரிய ஒளி பாதுகாப்பு தினத்தில், கோடையின் வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அனுபவிக்கும் முன், சன்ஸ்கிரீன் லோஷன், கிரீம் அல்லது ஸ்ப்ரேயை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவ்வாறு மேற்கொள்வது என்பது சூரிய ஒளி பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும். தோல் புற்றுநோய் தடுப்பு தேசிய கவுன்சில் வரும் மே 27-ந்தேதியை "டோன்ட் ப்ரை டே" என்ற தலைப்பில் கடைபிடிக்கிறது. இந்த நிலையில் சூரிய ஒளி பற்றி பலரும் பல கதைகளை கூறி வருகிறார்கள். அதில் எது உண்மை; எது பொய் என்பது குறித்து டாக்டர் ஐரீன் வில்லியம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து டாக்டர் ஐரீன் வில்லியம்ஸ் கூறுகையில், “அதிக வெப்பமான நாட்களில் மட்டுமே சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களில் சன்ஸ்கிரீன் இருந்தால், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தத் தேவையில்லை, அதிக சூரிய ஒளி பாதுகாப்பு காரணிகள் நிறைந்த சன்ஸ்கிரீன் லோஷனை ஒருமுறை பயன்படுத்தும்போது அது நாள் முழுவதும் நமது தோலுக்கு பாதுகாப்பை அளிக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை ஆகும். கடும் வெயிலான நாட்கள், வெயில் இல்லாத நாட்கள் என்பதை நாம் கருதாமல் சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்துவது என்பது நமது தோலுக்கு நன்மையை அளிக்கும். சூரிய ஒளி படாமல் நீங்கள் வீட்டிற்குள்ளே அதிக பிரகாசமான விளக்குகளுக்கு கீழ் அமர்ந்திருந்தாலும் இந்த லோஷன்களை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. பெரும்பாலான அழகுசாதனப் பொருட்கள் குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட சூரிய பாதுகாப்பு காரணி 30+ஐ விட மிகக் குறைவான பாதுகாப்பை வழங்குகின்றன. எனவே மேக்கப் போட்டிருந்தாலும் தனியாக சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்த வேண்டும்” என்றார்.
அவர் மேலும் பேசுகையில், “எந்த சன்ஸ்கிரீனாலும் நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்க முடியாது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை அல்லது நீச்சல் அல்லது வியர்வைக்குப் பிறகு சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்த வேண்டும். சுருக்கமாக கூறுவதென்றால், சூரியனின் புற ஊதா கதிர்களின் தீங்கிலிருந்து நமது தோலைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். தினந்தோறும் அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதோடு, எந்த வானிலை காலத்திலும் அவற்றை உபயோகிக்கலாம்.தேசிய சூரிய ஒளி பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தையொட்டி, தோலைப் பாதுகாக்க தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்தார்.