இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி இவி-யை அறிமுகப்படுத்தி உள்ளது. நகர்ப்புறம் மற்றும் வளர்ச்சிக்கண்டு வரும் நகர்ப்புறப் பகுதிகளுக்கான போக்குவரத்து பிரிவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேவைகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனமாக இந்த டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி இவி அறிமுகமாகியுள்ளது.
டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி என்பது அதிநவீன தொழில்நுட்பம், நீடித்து உழைக்கும் வடிவமைப்பு, அபாரமான செயல்திறன் மற்றும் என்றென்றும் தொடரும் நம்பகத்தன்மை ஆகிய அம்சங்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ‘டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி சிஎன்ஜி’ வகை வாகனத்தையும் காட்சிப்படுத்தி இருக்கிறது. இவ்வாகனம் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தம் புதிய டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி இவி அனைத்து பகுதிகளுக்கும் சரக்குப் போக்குவரத்து சென்றடையும் வகையிலும், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செளகரியத்தை அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளின் கடைக்கோடி வரை சரக்கு விநியோகத்தை இவ்வாகனம் உறுதிப்படுத்துகிறது.
மேலும் இவ்வாகன பிரிவிலேயே பல அம்சங்களை டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி இவி அறிமுகப்படுத்துகிறது. இரவு நேரங்களில் சாலைகளில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கு உதவும் வகையில் வெளிச்சத்தை வழங்கும் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில் லேம்ப்கள்; முழுவதுமாக திறக்கும் ஜன்னல்களுடன் கூடிய விசாலமான கேபின்; வாகனத்திற்குள் மேம்பட்ட காற்றோட்டத்திற்கான ஸ்டைலான கதவு டிரிம்கள்; மற்றும் சரக்கு சுமந்து செல்லும் போது கூட அபாரமான முறுக்குவிசையை வழங்கும் பிரத்தியேக பவர் கியர் பயன்முறை என பல புதிய அம்சங்கள் இவ்வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. ப்ளூடூத் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மூன்று சக்கர வாகனமாக அறிமுகமாகும் வகையில், இது டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸோநெட்உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன வசதியானது, 26 ஸ்மார்ட் அம்சங்களை வழங்குகிறது. பின்னால் வரும் வாகனங்களைப் பார்ப்பதற்கான இதன் ட்வின் ஆக்சிஸ் ரியர் - வியூ கண்ணாடிகள், மிகவும் நெரிசலான நகர வீதிகளிலும் கூட பாதுகாப்பான பயணிப்பதை உறுதி செய்கின்றன.
புதிய அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கமர்ஷியல் மொபிலிட்டி பிரிவு வணிகத் தலைவர் ரஜத் குப்தா கூறுகையில், “டிவிஎஸ் கிங் கார்கோ எச்டியின் அறிமுகம், சரக்கு போக்குவரத்தில் பரிணாம வளர்ச்சியில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தைக் குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். மேலும் இவ்வாகனம் எதிர்கால போக்குவரத்தை வரையறுக்கும் எங்களது ‘ரீ-இமேஜின் 2030’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடுத்தகட்டத்திற்கு அழைத்து செல்லும் தயாரிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக சுமையைத் தாங்கும் திறன், நிம்மதியாக பயணிக்க உதவும் செளகரியம், நெருக்கடியான பகுதிகளிலும் லாவகமாக ஓட்ட உதவும் பயன்பாடுகளுக்கேற்ற வடிவமைப்பு, மேம்பட்ட பாதுகாப்பு போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் மூன்று சக்கர வாகனப் பிரிவில் புதிய வரையறைகளை உருவாக்கும். டிவிஎஸ் கனெக்ட் அம்சங்களுடன் இணைந்து, இந்த வாகனம் வணிகங்களை மேம்படுத்துவதோடு, ஆபரேட்டர்களின் அன்றாட வாழ்க்கையையும் மேம்படுத்தும். டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி இவி மூலம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மறுவரையறை செய்வதோடு, அவர்கள் ஒவ்வொரு நாளும் சிரமமின்றி அதிக சாதனை படைக்க உதவுவோம் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்
டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி இவி முதல் கட்டமாக, டெல்லி, என்.சி.ஆர். (ஃபரிதாபாத், நொய்டா, குர்கான், காஜியாபாத்), ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் ரூ. 3.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கும்.